Homeஇலங்கை

வெயாங்கொடையில் புதையல் தேடும் பணி நிறைவு

நீதிமன்ற உத்தரவுக்கமைய, வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருப்பதாக கூறப்படும் புதையல் தேடும் 3 நாள் அகழ்வுப் பணிகள் இன்று மாலை 4 மணியளவில் நிறைவடைந்தன.

பல அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணியின் நிறைவில் எந்தவொரு புதையல் அல்லது பெறுமதியான தொல்பொருட்கள் கிடைக்கவில்லை.

வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் இருப்பதாக வதந்தி பரவியதையடுத்து, கடந்த சில நாட்களாக பல்வேறு நபர்கள் இங்கு சட்டவிரோதமாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர். எனினும் குறித்த இடத்தில் தொடர்ந்து சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டன.

இது தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததையடுத்து, அத்தனகல்ல நீதவான் மேற்படி இடத்தில் புதையல் உள்ளதா என்பதை கண்டறியுமாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, தொல்பொருள் திணைக்களம், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மீரிகம பிரதேச செயலகம் ஆகிய அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் மேற்பார்வையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் முன்னிலையில் புதையல் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

முதல் நாள் மழை குறுக்கிட்டதால் அகழ்வாராய்ச்சியில் எதுவும் கிடைக்காத நிலையில், 2ஆவது நாளான நேற்று நடந்த அகழ்வுப் பணியின் போது பெரிய கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று மதியம் கல் உடைக்கும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு, குறித்த கல்லை அகற்றியும் பணியை நிறைவு செய்ய முடியவில்லை.

அகழ்வு பணிகளுக்கு அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் இரண்டு நாட்களே அவகாசம் வழங்கியிருந்த நிலையில், அந்த கால அவகாசம் நேற்று பிற்பகல் நிறைவடைந்தது.

எனினும், இது தொடர்பில் நீதிமன்றில் காரணங்களை முன்வைத்து மேலதிகமாக இன்றைய நாளையும் பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதன்படி, மூன்றாவது நாளாக இன்று காலை 9 மணிக்கு புதையல் தோண்டும் பணி தொடங்கியது.

பாரிய கல்லை அகற்ற முடியாத பின்னணியில் அதை வெட்டி எடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் கல் துண்டுகளாக நொறுக்கப்பட்டன.

அதன்படி, புதையல் அல்லது தொல்பொருள் மதிப்பு எதுவும் கிடைக்காததால், அங்கு கூடியிருந்த அனைத்து அரச அதிகாரிகளின் உடன்படிக்கையின்படி இன்று மாலை 4 மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

இது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் காரணங்களை அறிக்கையிட்டு, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அங்கு திரண்டிருந்த மக்களும் கலைந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த இடத்தில் தொல்பொருள் பெறுமதியான எதுவும் இல்லை என தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் இன்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button