
இன்று இலங்கையின் 77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 4 ஆம் திகதி தேசிய பெருமை மற்றும் கௌரவத்தின் கொண்டாட்டமாக அனுசரிக்கப்படுகிறது.
தேசிய மறுமலர்ச்சிக்கான பேரணி’ என்ற தொனிப்பொருளில் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெறவுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுதந்திர சதுக்கம் மற்றும் சுதந்திர அவென்யூ பகுதிகளை மையமாக வைத்து நடைபெறும்.
கடந்த ஆண்டு 3,384 பேர் பங்கேற்ற சுதந்திர தினத்தை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு 1,873 முப்படை வீரர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர், இந்த வருட சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முப்படைகளின் கவச வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஆண்டு பயன்படுத்தப்பட்ட 19 விமானங்களுக்கு மாறாக இந்த ஆண்டு விமானப்படைக்கு சொந்தமான மூன்று விமானங்கள் மட்டுமே சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும் அதேவேளை பெப்ரவரி 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் அனைத்து அரச நிறுவனங்களையும் மின் விளக்குகளால் அலங்கரிக்கும் தீர்மானமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு அருகில் நிகழ்வில் கலந்து கொள்ளும் அழைப்பாளர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு சோதனைகளுடன் கொழும்பு பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள், சாலை மூடல்கள் மற்றும் மாற்று வழிகளைப் பயன்படுத்துதல் தொடர்பாக சிறப்பு போக்குவரத்துத் திட்டம் வகுக்கப்பட்டு 77 வது சுதந்திரத்தினமானது கொண்டாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.