இந்திய அணி வெற்றியில்: முரண்பாடான விமர்சனங்கள்

Shanu
மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பை வென்ற நிலையில், அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியா ஒரே இடத்தில் தனது போட்டிகள் அனைத்தையும் விளையாடி கோப்பை வென்றுவிட்டது என இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலரும் பேசியிருந்தனர்.
குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் நாசர் ஹுசைன், மைக்கேல் ஆதர்டன், மைக்கேல் வாகன் போன்றவர்கள் இது பற்றி தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், அதற்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடும் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
இந்தியா சொந்த இடத்தில் விளையாடியது, ஒரே இடத்தில் விளையாடியது அதனால் கோப்பை வென்றது என்றால், ஆறு முறைக்கும் அதிகமாக உலக கோப்பை தொடரை நடத்திய இங்கிலாந்து அணி ஏன் 2019க்கு முன் கோப்பை வெல்லவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.
இது பற்றி சுனில் கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில், “இந்தியா ஒரே மைதானத்தில் விளையாடியது, மற்ற நகரங்களுக்கு பயணம் செய்யவில்லை என்பதை பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்பவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். ஆனால், இது சர்வதேச கிரிக்கெட் அமைப்பால் இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டது.”
“நீங்கள் இது பற்றி ஏதேனும் விமர்சனம் செய்ய வேண்டி இருந்தால், இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாக பந்து வீசப்படுவதற்கு முன்பாகவே அதை செய்திருக்க வேண்டும்.
இந்திய அணி சொந்த இடத்தில் ஆடியதால் தான் வென்றது என்றால், ஏன் இங்கிலாந்து 2019க்கு முன் அதிக ஐசிசி தொடர்களை வெல்லவில்லை? அவர்கள் ஆறு முறைக்கும் அதிகமாக ஐசிசி தொடர்களை நடத்தி இருக்கிறார்கள்.
அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் இந்தியாவை பற்றி தற்போது விமர்சனம் செய்து வருகிறார்கள்” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.