Homeஇலங்கை

அரச ஊழியர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்

அரச ஊழியர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்

வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத் திட்டத்தை மாற்றினால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தினார்.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் 15 இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்  வஜிர அபேவர்தன,

”இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானத் தேர்தலாகும். நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல சட்ட சீர்திருத்தங்களை மேற்கொண்டார். 

பொருளாதார பரிமாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யார் கொள்கையை முன்வைத்தாலும், அது இந்த சட்டங்களின்படியே செய்யப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கும் நாடுகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். இந்த சட்டங்களின்படி நாங்கள் செயல்படுவோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம். எனவே வீழ்ந்து கிடந்த இந்த நாட்டை மீட்டெடுத்த  ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அந்த நிபந்தனைகள் திருத்தப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும்.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 15 இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பினைப் பயன்படுத்தும் போது சரியான முடிவை எடுக்க வேண்டும்.

சிலர் திருடர்களைப் பிடிக்க அதிகாரம் கேட்கிறார்கள். ஆனால் இனிமேல் அவன் திருடன் இவன் திருடன் என கூறிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆசியாவிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஊழலுக்கு எதிரான சட்டம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் முறையிட மட்டுமே வேண்டும்.  திருடர்களைப் பிடிப்பதாகக் கூறும் எதிர்க்கட்சித் தலைவர்களின் பெயர்கள் கூட அமைச்சுக்களின் கணக்காய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்பதற்காக உழைக்கும் போது ஜனாதிபதி அரச ஊழியர்களை மறக்கவில்லை. அரச இயந்திரத்தின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி நன்கு உணர்ந்துள்ளார்.

அதனால்தான் கடந்த காலத்தில் அரச  ஊழியர்களுக்கு 10 000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக வழங்கப்பட்டது. மேலும், 2025 முதல் மாதாந்தம் 25000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி, அரசாங்க ஊழியரின் ஆரம்பச் சம்பளம் 24% அதிகரிக்கப்படவுள்ளதுஇ வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் மொத்த சம்பளமாக  55000 ரூபா வழங்கும் இலக்கை அடைய இருப்பதாக ஜனாதிபதியின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பல்வேறு தரப்பினரும் பல்வேறு முன்மொழிவுகளையும் வாக்குறுதிகளையும் உள்ளடக்கியிருந்தாலும், அந்த வாக்குறுதிகள் யதார்த்தமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

எனவே, அரசு இயந்திரம் கவனமாக செயல்படாவிட்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். 2019 இல், அரசு ஊழியர்கள் அந்த தவறை செய்தார்கள். மீண்டும் அந்த தவறை அவர்கள் செய்யக் கூடாது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் கொள்கை பிரகடனத்தை முன்வைத்துள்ளார்.

எனவே, அரசு ஊழியர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.  38 வேட்பாளர்களில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட, அனுபவம் உள்ள, நாட்டைப் பாதுகாக்கக் கூடிய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு இணையான தலைவர் யாரும் இல்லை.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் என்னை தோற்கடித்தாலும் பரவாயில்லை. ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்காதீர்கள். அவரைத் தோற்கடித்தால் முழு நாடும் அழிந்துவிடும்.  சிலிண்டருக்கான நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button