இலங்கை
Trending

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர்..!!

தாய்லாந்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக அவர் இலங்கை செல்லவுள்ளதாக தாய்லாந்து வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையும் தாய்லாந்தும் 2023 டிசம்பர் 18-20 வரை 9வது சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக தாய்லாந்து வர்த்தகத் திணைக்களத்தின் பணிப்பாளர் சோதிமா இம்சவாஸ்திகுல் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதன்போது வர்த்தகம், சேவைகள், முதலீடுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு விதிகள் குறித்து இணக்கம் ஏற்பட்டதாக சோதிமா கூறியுள்ளார்.

இதனையடுத்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், பெப்ரவரி மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் தவிசின் இலங்கைக்கு செல்லவுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக தாய்லாந்தின் வர்த்தக அமைச்சு இலங்கையுடனான பேச்சுவார்த்தை முடிவுகளை தாய்லாந்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஜனவரி முதல் அக்டோபர் வரை, தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 320.37 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இந்த காலப்பகுதியில் தாய்லாந்து 213.49 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இலங்கையில் இருந்து 106.88 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button