Homeவிளையாட்டு

இலங்கை அணியில் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க

இலங்கை அணியில் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க

இங்கிலாந்துக்கு எதிராக   இன்று புதன்கிழமை (21) ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் மிலன் ரத்நாயக்க அறிமுக  வீரராக  இலங்கை அணியில்   இடம்பெறவுள்ளார். 

அனுபவம் வாய்ந்த கசுன் ராஜித்த, லஹிரு குமார ஆகிய இருவரும் இந்த டெஸ்ட் போட்டிக்கு கருத்தில் கொள்ளப்படவில்லை. 

இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் மிலன் ரத்நாயக்க இடம்பெற்றபோதிலும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இதுவரை 40 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள மிலன் ரத்நாயக்க, 81 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றியுள்ளதுடன் 660 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். இதில் 2 அரைச் சதங்களும் அடங்குகின்றன. 

இதேவேளை, இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் 7 துடுப்பாட்ட வீரர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழல்பந்துவீச்சாளருடன் இலங்கை  அணி   களம் இறங்கவுள்ளது. 

திமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்க,  குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ் ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக அணியில் இடம்பெறுகின்றனர். 

இவர்கள் அனைவருமே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியுள்ளதுடன் 7ஆம் இலக்கம் வரை துடுப்பாட்டம் நீண்டுகொண்டு போகிறது. 

விஷ்வா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, மிலன் ரத்நாயக்க ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களுடன் பிரதான சுழல்பந்துவீச்சாளராக ப்ரபாத் ஜயசூரிய அணியில் இடம்பெறுகிறார். 

அவர்களில் விஷ்வா மற்றும் அசித்த ஆகிய இருவரும் இங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவசாலிகள் என்பதால் அவர்கள் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் இங்கிலாந்து அணிக்கு சவாலாகத் திகழ்வர் என நம்பப்படுகிறது.      

ப்ரபாத் ஜயசூரிய 12 டெஸ்ட் போட்டிகளில் 71 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளபோதிலும் அந்நிய மண்ணில் 8 விக்கெட்களை மாத்திரமே வீழ்த்தியுள்ளார். ஆகையால் அவர் எந்தளவு இங்கிலாந்து மண்ணில் சாதிப்பார் என அனுமானிக்க முடியாதுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button