உலகம்
Trending

ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு மரண தண்டனை – சீன நீதிமன்றம் அதிரடி…!!

சீனாவின் மிகவும் பிரபலமான வங்கிகளில் ஒன்றான சிஐடிஐசி வங்கியின் முன்னாள் தலைவராக சன் தேஷூன் பணியாற்றியபோது, அவர் ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

இந்த விசாரணையின் முடிவில், சன் தேஷூன், தான் தலைவராக பணியாற்றிய காலத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கடன் பெற்று தந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு கைமாறாக அவர் ரூ.1,137 கோடி வரை பணமாகவும், பொருளாகவும் லஞ்சமாக வாங்கியிருக்கிறார்.

எனவே அவரை கைது செய்த அந்நாட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரின் மொத்த சொத்துக்களையும் முடக்கினர். இதனையடுத்து இவர் மீதான வழக்கு கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஜினான் நகரின் இடைநிலை மக்கள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “சன் தேஷூன் 2003ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இந்த ஊழலில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த குற்றங்கள் மிகவும் தீவிரமானவை. இதனால் நாட்டின் நலன் பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்கள் பெரும் இழப்புகளை சந்தித்திருக்கின்றனர். எனவே முடக்கப்பட்ட இவரது அனைத்து சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்யும். இவருக்கு வாழ்நாள் முழுவதும் அனைத்து அரசியல் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மட்டுமல்லாது இரண்டு ஆண்டுகள் அவகாசத்திற்கு பின்னர் இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த தீர்ப்பு குறித்து அந்நாட்டின் அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், நிச்சயமாக சன் தேஷூனுக்கு விடுதலை கிடைக்காது. ஆனால் அதே நேரம் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளனர். முன்னதாக கடந்த வாரம் சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் ஜாங் ஹோங்லி மீதான ஊழல் விசாரணையை அந்நாட்டின் நீதிமன்றம் தொடங்கியிருந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஊழலுக்கு எதிரான பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சமீபத்தில் கூறியிருந்த நிலையில் ஊழல் வழக்குகள் பல வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.

சீனாவை பொறுத்த அளவில் அது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு சவால் விடும் வகையில் அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவும் சீனாவும் ஏறத்தாழ ஒரே நேரத்தில்தான் சுதந்திரம் பெற்றன. ஆனால் இரு நாடுகளும் பயணித்த பாதைகள் வெவ்வேறானதாகும். சீனாவின் வறுமை ஒழிப்பு திட்டம் உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. தற்போது அங்கு கம்யூனிஸ்ட் கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. இரண்டாவது முறையாக அதிபராக ஜி ஜின்பிங் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button