இந்தியா
Trending

கஜா புயலின் போது மாமனார் வீட்டு விசேஷத்தை சிறப்பித்த எடப்பாடிக்கு உதயநிதியைப் பற்றிப் பேசவே தகுதி இல்லை – ஆர்எஸ் பாரதி விளாசல்…!!

தமிழ்நாடு

சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக முதல் முறையாக எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சாடியிருந்தார்.

இதுதொடர்பாக அவர், மதுரை மாநாடு பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. அதிமுக மதுரை மாநாடு போல் இனி யாராலும் மாநாடு நடத்த முடியாது. மதுரை மாநாட்டை விமர்சித்த உதயநிதி ஸ்டாலினால் திமுக இளைஞரணி மாநாட்டை நடத்த முடியவில்லை” என கூறியிருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…

சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து எப்போதாவது வெளியில் வந்து, முகத்தைக் காட்டி விட்டு மீண்டும் வீட்டுக்குள் பதுங்கிக் கொள்வதையே வழக்கமாக வைத்திருப்பவர்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி.நானும் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காகத் திருவாய் மலர்ந்து பேட்டிகள் கொடுப்பார்.

சென்னையை சுற்றிலும், நெல்லையை சுற்றிலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கான நிவாரண பொருள்களை வழங்கி மக்கள் பணி செய்ய மனமில்லாமல், பொதுக்குழு என்ற பெயரால் பொழுதுபோக்கு கச்சேரியை நடத்தி முடித்திருக்கிறார் பழனிசாமி.

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை எனத் தெளிவுபடுத்திவிட்டோம் என பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி இல்லை என முடிவாகிவிட்டால் பாஜகவை விமர்சிக்க வேண்டியதுதானே! அதிமுகவை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

சென்னையிலும் தென் மாவட்டங்களிலும் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புகளின் காரணமாகக் கழக இளைஞரணி மாநாடு தள்ளி வைக்கப்பட்டதை ஏளனம் செய்து மட்டமாகக் கருத்து தெரிவித்துப் பேசியிருக்கிறார் பழனிசாமி. புயல், மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது மாநாடு நடத்தவேண்டாம் என்று எங்கள் திமுக தலைமை முடிவெடுத்ததைப் பழனிசாமி பாராட்டி இருக்கவேண்டும். ஏதோ தான் சாபம் விட்டதைப் போல சவடால் விட்டுள்ளார் பழனிசாமி.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டையே டிவியை பார்த்து தெரிந்து கொண்டவர் பழனிசாமி. அதனால் அவர் டிவி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். இளைஞர் அணி மாநாடு 2 முறைதான் தள்ளி வைக்கப்பட்டது. அதுவும் மக்களுக்காக.

கஜா புயல் டெல்டாவைத் தாக்கியபோது சேமூர் அம்மாபாளையத்தில் மாமனார் வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்த பழனிசாமி எல்லாம் வெள்ள பாதிப்புக் களத்தில் மக்களோடு நிற்கும் அமைச்சர் உதயநிதியைப் பற்றிப் பேசவே அருகதை அற்றவர்.

அதிமுக தோல்வியை தோளில் போட்டு வளர்த்து வருகிறவர் பழனிசாமி. அவரால் அதிமுகவை அரை அங்குலம் கூட வளர்க்க முடியாது என்பது அக்கட்சியினருக்கே தெரியும். வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தோல்வியை தழுவி ‘தோல்விசாமி’ என்பதை அவர் மெய்ப்பிக்கத்தான் போகிறார். இதனை நாடு பார்க்கத்தான் போகிறது” என கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button