இலங்கை

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றத்தில் கைதானவர் விளக்கமறியலில்

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றத்தில் கைதானவர் விளக்கமறியலில்

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்த முற்பட்டார் எனும் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் தொலைபேசி மற்றும் முகநூல் என்பன நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு திடீரென செயலிழந்திருந்ததுடன், வைத்தியசாலை விடுதிக்கு முன்னால் அவரது கார் தரித்து நின்றமையாலும் பல்வேறு விதமான சந்தேகங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக எழுப்பட்டிருந்தது. 

வைத்தியரை காணவில்லை எனவும் சாவகச்சேரி பொலிஸாருக்கும் தகவல்கள் வழங்கப்பட்டன. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்குடன் பொலிஸார் வைத்தியசாலைக்கு வந்திருந்தனர். 

அந்நிலையில் யூடியூபர் இருவர் உள்ளிட்ட மூவர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து காணொளிகளை எடுத்ததுடன், சமூக வலைத்தளங்களில் நேரலையில், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை தெரிவித்ததுடன், தவறான தகவல்களையும் பரப்ப முற்பட்ட நிலையில் மூவரையும் பொலிஸார் கைது செய்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று இருந்தனர்.

அதேவேளை, விடுதிக்குள் வைத்தியர் இருந்த நிலையில் பொலிஸார், கதவை தட்டி வைத்தியரை வெளியே அழைத்த வேளை, வைத்தியர் பதில் எதுவும் கூறாததால், கதவினை உடைக்க முயற்சித்த வேளை, வெளியே வந்த வைத்தியர், எதற்காக விடுதிக்குள் வந்தீர்கள் என பொலிஸாருடன் தர்க்கப்பட்டு கொண்டார். அதனால் பொலிஸார் அவ்விடத்தில் இருந்து வெளியேறி இருந்தனர். 

அந்நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய வேளை யூடியூபர்ஸ் இருவரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, மற்றைய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர், கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்திருந்த போது சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகருக்கு ஆதரவாக குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுக்கப்பட்டிருந்த நிலையிலையே, தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button