இந்தியா
Trending

நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார் – முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

தமிழ்நாடு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நண்பர், மறைந்த திருமங்கலம் கோபால் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இதன் பின்னர் மணமக்களுக்கு கலப்பு திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இதன் பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..

நான் தொடர்ந்து ஒவ்வொரு திருமண விழாக்களிலும் சொல்லும் செய்தி, சீர்திருத்த திருமணங்கள், சுயமரியாதை திருமணங்கள் நடந்தால் நான் அதனை அன்போடு எடுத்து நடத்துவது உண்டு. 1967-க்கு முன் இது போன்ற திருமணங்கள் சட்டப்படியாக ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தன.

ஆனால் 1967 பிறகு அண்ணா ஆட்சி காலத்தில் சீர்திருத்த திருமணங்கள் சட்டபடி செல்லும் என நமக்கு எல்லாம் உரிமை பெற்று தந்தார்கள். அதன் படி இன்று சட்டபடி இந்த திருமணம் நடந்துள்ளது. இது சீர்திருத்த திருமணம் மட்டும் அல்ல, இது ஒரு கலப்பு திருமணம். இது ஒரு காதல் திருமணமாக கூட இருந்திருக்க கூடும்.

இளைஞரணி தோற்றுவித்த காலத்தில், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி என எல்லா பகுதிகளிலும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். அப்போது எல்லாம் எனது பாதுகாப்புக்காக கோபால் துணை வந்திருக்கிறார். திராவிட முன்னேற்ற கழகத்தின் எத்தனை அணிகள் இருந்தாலும், எல்லா அணிகளை விடவும் சிறந்த அணி இருக்கிறது என்றால் அது இளைஞர் அணியாக தான் இருக்க முடியும். அது எதார்த்தம் தான், அப்படி சொல்வதால் யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள்

தற்போது அந்த இளைஞர் அணி தம்பி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இயங்கி வருகிறது. எப்படி அன்றைக்கு இளைஞர் அணியை ஊக்கப்படுத்த வேண்டும், வளர்ச்சி அடைய வேண்டும் என பேராசிரியர் நினைத்தாரோ, இன்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதே போல இன்று நடத்தி கொண்டு வருகிறார்

இன்று ஊடகங்களில், சமூக வலைதளங்களில் தவறான விஷயங்களை பரப்பி வருகிறார்கள். அண்ணாமலை போன்றோர் கருத்துகளை சொல்லியிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் நமது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் கோயில்களை நாம் கொள்ளை அடித்து கொண்டிருக்கிறோம் என பேசி இருக்கிறார். இதுவரை ரூ.5500 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில் தான் மீட்கப்பட்டு உள்ளது.

உண்மையில் அவர்களுக்கு பக்தி என்பது இருந்திருந்தால் அப்படி பேசியிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு உணமையான பக்தி இல்லை, அது பகல் வேஷம். திராவிட மாடல் ஆட்சியை திருப்பி அனுப்ப கங்கனம் கட்டி செயல்படுகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வரக்கூடிய 2024 நாடாளுமன்ற தேர்தல்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button