உலகம்
Trending

பூமியை விட்டு மறைந்த கம்பளி யானை – மீண்டும் உயிர் பெற்று வருகிறதா?

கம்பளி யானை (woolly mammoth ) என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் வாழ்ந்து வந்த பெரும் விலங்கு இனம். இவை இன்றைய யானைகளின் மூதாதையினராகக் கருதப்படுகின்றன. இவற்றின் உடல் முழுவதும் அடர்த்தியான உரோமங்களால் போர்த்தப்பட்டிருந்த காரணத்தால் இவை கம்பளி யானைகள் என அழைக்கப்பட்டன. ஆதிகால மனிதர்களால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் இவ்விலங்குகளின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வினம் பூமியிலிருந்து முற்றாக அழிந்துவிட்டதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

வட அமெரிக்காவிலும் வடக்கு யூரேசியாப் பகுதியில் சைபீரியாவிலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள், மற்றும் பனியில் உறைந்த எலும்புக்கூடுகள் ஆகியவற்றில் இருந்து இந்த விலங்குகள் பற்றி அறியவந்துள்ளது. குறைந்தது 150,000 ஆண்டு வயதான இவ்விலங்கு பற்றிய முதலாவது தரவு யூரேசியாவின் உறைபனிப் பரவலின் போது பெறப்பட்டது. தற்போதுள்ள யானை இனங்கள் பொதுவாக வெப்ப மண்டல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன. ஆனால், கம்பளி யானையின் எலும்புக்கூடுகள் பனி படர்ந்த இடங்களில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. எனவே, கம்பளி யானை தற்போதுள்ள யானை இடங்களை விட முற்றிலும் மாறுபட்ட உயிரினம் என்று கண்டறியப்பட்டது.

இந்த கம்பளி யானை மாமூத் என்னும் இனத்தைச் சேர்ந்தவை. மொத்த மாமூத் இனங்களின் வசிப்பிடம் 42,000 அண்டுகளுக்கு முன் 77 இலட்சம் சதுர கிலோமீட்டர்களில் இருந்து 8 இலட்சம் சதுர கிலோமீட்டர்களாக குறைந்தது. அதிலும் குறிப்பாக இந்த கம்பளி யானைகள் 12.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே பெருமளவு அழிவைத் தழுவியது. இதற்கு முக்கிய காரணம் கடைப் பனியூழிக் காலத்தில் நடந்த தட்பவெப்ப மாற்றங்களும் இதன் இனம் அக்கால மனித இனங்களால் வேட்டையாடப் பட்டதுமே ஆகும்

கம்பளி யானையின் உடற்கலங்களிலிருந்து டி.என்.ஏ மூலக்கூறுகளைப் பெற்றுப் படியெடுப்பு (குளோனிங்) முறையில் இவ்விலங்கினத்தை மீண்டும் உருவாக்குவதற்கான வேலைப்பாடுகளை அறிவியலாளர்கள் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், Colossal Biosciences என்ற ஆய்வு நிறுவனம், கம்பளி யானையின் உடலில் உறைந்த நிலையிலுள்ள அதன் விந்துக் கலங்களைப் பிரித்தெடுத்து இப்போதுள்ள ஆசிய பெண் யானையொன்றுக்குச் செலுத்தி கம்பளி யானையை ஒத்த புதிய குட்டியை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். 2028ல் இந்த முயற்சி வெற்றி அடையும் என்றும் தெரிவிக்கின்ற்னர். இந்த இரண்டு உயிரினங்களின் மரபணுத்தொகை 99.6% ஒத்துப்போவதால், கம்பளி யானையின் உருவமைப்பு ஒத்த குட்டியை உருவாக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button