உலகம்
Trending

மருத்துவமனையில் குவியும் குழந்தைகள் – சீன அரசு எடுத்த அதிரடி முடிவு…!!

கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்குப் பிறகு, சீனாவை கடந்த சில நாட்களாக நிமோனியா பாதிப்பு ஆட்டிப் படைத்து வருகிறது. குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த பாதிப்புகளுக்கு இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா போன்ற ஏற்கெனவே அறியப்பட்ட கிருமிகள் தான் பாதிப்பு என சீனா கூறிக் கொண்டே இருக்கிறது. இருந்தாலும், சுவாச கோளாறுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாமல், திணறி வருகிறது சீனா.

இந்த நிலையில், சீனாவில் நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.இதனால், மருத்துவமனையிலேயே குழந்தைகள் தங்கி பல நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

நிமோனியா தொற்று அதிகரித்து வருவதால், பல மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது சீன அரசு. இருந்தாலும், கொரோனா காலத்தை போல, ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த பல பள்ளிகள் விரும்பவில்லை.பெற்றோருக்கும் அதில் விருப்பமில்லை. எனவே, குழந்தைகள் அதிக அளவில் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளே, தற்காலிக பள்ளிக் கூடங்களாக மாற்றப்பட்டுள்ளன. மருத்துவமனை வளாகங்களிலேயே Homework Zones என்ற பெயரில் அறைகளை உருவாக்கி, ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அங்கு பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

குறிப்பாக, ஜியாங்சு, அன்ஹுய் மற்றும் மத்திய ஹூபே மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகள் சிகிச்சையின்போதே குழந்தைகள் படிப்பதற்காக, மேசைகள் மற்றும் நாற்காலிகளை வழங்கியுள்ளன. அங்கு முகக்கவசம் அணிந்து கொண்டு தங்களது பெற்றோரின் உதவியோடு மாணவ, மாணவிகள் பாடங்களை படித்து வரும் வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளன.

குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பும்போது, ஏற்படும் அதிக பாடச்சுமையை தவிர்ப்பதற்காகவே இத்தகைய ஏற்பாடுகளை செய்திருப்பதாக மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன. அதை பெற்றோரும், ஆசிரியர்களும் ஆமோதிக்கும் நிலையில், உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் குழந்தைகளை படிக்க வைப்பது சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால், சீன அரசோ, அங்குள்ள பெற்றோரோ, சமூக ஆர்வலர்களோ இந்த கருத்துகளை பெரிதாக கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button