உலகம்
Trending

2வது உலக போருக்கு பின் பெரிய மாற்றம் – நெதர்லாந்து பிரதமராகும் இஸ்லாம் எதிர்ப்பாளர் கீர்ட் வில்டர்ஸ்…!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் மார்க் ருடே. இவர் விவிடி எனும் ‘சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக் கான மக்கள் கட்சியை’ சேர்ந்தவர். இந்த கட்சி என்பது வலதுசாரி கட்சியாகும்.

இவர் கடந்த 2010ம் ஆண்டு முதல் பிரதமராக தொடர்ந்து வருகிறார். 13 ஆண்டுகளாக பிரதமராக இருப்பதால் நெதர்லாந்தில் அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் என்ற பெருமை மார்க் ருடேவுக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். நெதர்லாந்து நாட்டை பொறுத்தமட்டில் போர், பேரிடர் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் மக்களை அந்நாடு அகதிகளாக அரவணைத்து கொள்கிறது. இதனால் ஆண்டுதோறும் நெதர்லாந்து நாட்டுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு மார்க் ருடே கடிவாளம் போட நினைத்த நிலையில் அவரது கூட்டணியில் இருப்பவர்களே எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருந்ததால் புதிய பிரதமர் நியமனம் செய்யப்படவில்லை. மார்க் ருடே ராஜினாமா செய்தாலும் கூட இடைக்கால பிரதமராக தொடர்ந்து வந்தார். இந்நிலையில் நெதர்லாந்துக்கு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று அமைதியான முறையில் நடந்தது. நெதர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழ்சபை என்பது மொத்தம் 150 இடங்களை கொண்டதாகும். இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 76 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இந்த தேர்தலில் பிரதமர் மார்க் ருட்டேயின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கான மக்கள் கட்சிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான அதோடு முஸ்லிம் எதிர்ப்பு கொள்கை கொண்ட கீர்ட் வில்டர்ஸின் தீவிர வலதுசாரி இயக்கமான பிவிவி எனும் சுதந்திரத்துக்கான கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தற்போதைய பிரதமர் மார்க் ருடேவின் கட்சியை விட முஸ்லிம் எதிர்ப்பு கொண்ட கீர்ட் வில்டர்ஸின் கட்சி முன்னிலையில் உள்ளது. என்ஓஎஸ் சார்பில் வெளியிடப்பட்ட கருத்து கணிப்பில் 150 தொகுதிகளில் கீர்ட் வில்டர்ஸ் கட்சி 35 தொகுதிகளை பெற்றது. கடந்த தேர்தலில் அவரது கட்சி 17 இடங்களை மட்டும் பெற்றிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 18 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீர்ட் வில்டர்ஸ் தனது தேர்தல் பிரசாரத்தின்போது 3 முக்கிய விஷயங்களை தெரிவித்தார். நான் வெற்றி பெற்று பிரதமரானால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஓட்டெடுப்பு நடத்துவேன். அகதிகளாக வருவோரையும் மொத்தமாக நிறுத்துவேன். அதோடு நெதர்லாந்து இஸ்லாமிய நாடாக மாறுவதை அனுமதிக்க மாட்டேன் என்றார். இருப்பினும் கூட தேர்தல் வேளையில் இஸ்லாம் சார்பு விஷயங்களை அவர் முன்பு போல் ஆக்ரோஷமாக பேசவில்லை.

இந்நிலையில் தான் முஸ்லிம் எதிர்ப்பில் தீவிரம்காட்டுவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நெதர்லாந்தை வெளியேற்றுவதில் உறுதியாக இருக்கும் கீர்ட் வில்டர்ஸ் நெதர்லாந்தில் பிரதமராவது என்பது 2ம் உலக போருக்கு பின்னர் அங்கு நடக்கும் மிகப்பெரிய அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில கட்சிகள் கீர்ட் வில்டர்ஸ் உடன் கூட்டணி அமைக்க பயப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது கட்சி அதிக இடங்களை பெறும்பட்சத்தில் அவர் பிரதமராவது உறுதி என உலக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button