கண்டியில் வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது
கண்டியில் வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
கண்டி நீதிமன்ற வளாகத்தில் இன்று (02) பிற்பகல் வெடிகுண்டு இருப்பதாக 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்த நபரை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி பொலிஸார் கினிகத்தேனை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரான கினிகத்தேனை கடவல, பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்படும் போது குறித்த தொலைபேசி தன்னிடம் இருக்கவில்லை எனவும் நேற்று (01) பிற்பகல் குறித்த தொலைபேசி காணாமல் போயுள்ளதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தனியார் பேருந்து நடத்துனராக கடமையாற்றியவர் எனவும், அவரிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் விராஜ் விதானகே தெரிவித்தார்.
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, அங்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினரும் வழக்குகளின் விசாரணையை நிறுத்தி, நீதிமன்ற வளாகத்தில் இருந்து மக்களை வெளியேற்றினர்.
வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து இது தொடர்பான தேடுதல் பணியை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக கண்டி நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.