மக்கள் விரும்பும் மாற்றம் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களிடம் இல்லை எனவும், அதற்கான மூலோபாய திட்டம் தன்னிடம் இருப்பதாகவும் சர்வஜன வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மவ்பிம ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (18) நடைபெற்ற அறிஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“இப்போது ஜனாதிபதித் தேர்தல் ஒன்று வந்துவிட்டது. சஜித் பிரேமதாச இருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க இருக்கிறார். அனுரகுமார திஸாநாயக்க இருக்கிறார். நாமல் ராஜபக்சவையும் சேர்த்து கொள்ளுவோம். இவர்கள் அனைவரும் அமைச்சரவை அமைச்சர்களாக இருந்துள்ளனர்.
அனுரகுமார இலங்கையின் முன்னாள் அமைச்சரவை அமைச்சர். அவருக்கு மிகவும் அதிகாரம் பெற்ற விவசாய அமைச்சு கிடைத்தது. நம் நாமலுக்கும் அப்படித்தான்.
அவருக்கு 5 அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று இவர்கள் சொல்கிறார்கள். அனுரகுமார எங்கள் நண்பர், அவர் தான் மிகப்பெரிய பொய் சொல்கிறார். அவர் மறைமுகமாக அனைத்து அரசாங்கங்களுக்கும் உதவி செய்துள்ளார். நேரடியாக 2 அரசுகளில் இருந்துள்ளார்.
குறிப்பாக இந்த விகிதாசார தேர்தல் முறையே இந்த நாடு இவ்வளவு தூரம் வீணாய் போனதற்கு காரணம். அப்படியானால் இந்த அரசியலை மாற்றும் திட்டத்தை எப்போதாவது முன்வைத்தார்களா? முன்மொழியப்பட்ட பிரேரணையை எதிர்ப்பதைத் தவிர இவர்கள் வேறு ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் ஏன் இந்த அரசியலில் அங்கம் வகிக்கிறார்கள்?
இப்போது இவர்களது மேடைகளைப் பாருங்கள், ரணில் விக்கிரமசிங்க எரிவாயுத் சிலின்டரை கொண்டு வருகிறார், எரிவாயுத் சிலின்டர் வெடிக்கலாம். வரிசைகள் இருக்கும் என்று மக்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார்கள். வரிசைகளை உருவாக்கியவர்களுடன் சேர்ந்துள்ளனர்.
சஜித் பிரேமதாச கல்வி முறையை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றி பட்டியலிடுகிறார். வேடிக்கையாக இருக்கிறது. அதில் எந்த ஒரு திட்டத்தையும் குறிப்பிடவில்லை.
அதேபோல் அனுரகுமாரவும் சொல்கிறார், நாங்கள் வந்ததும் எரிபொருளின் விலை குறைக்கப்படும் என்று. நாங்கள் வந்ததும், புத்தகங்களின் மீதான VAT நீக்கப்படும், இதைச் செய்ய எங்களுக்கு ஒரு ஜனாதிபதி தேவையா? இதைத்தான் ஒரு ஜனாதிபதி மக்களுக்கு சொல்ல வேண்டியது?