இங்கிலாந்துடனான டெஸ்டில் இக்கட்டான நிலையில் இலங்கை; 4 விக்கெட்கள் மீதமிருக்க 82 ஓட்டங்களால் மாத்திரம் முன்னிலை
இங்கிலாந்துடனான டெஸ்டில் இக்கட்டான நிலையில் இலங்கை; 4 விக்கெட்கள் மீதமிருக்க 82 ஓட்டங்களால் மாத்திரம் முன்னிலை
மென்ச்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் இக்கட்டான நிலையை இலங்கை எதிர்கொண்டுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 132 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த இலங்கை மூன்றாம் நாளான இன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
மேலும் 4 விக்கெட்கள் மீதம் இருக்கும் நிலையில் 82 ஓட்டங்களால் மாத்திரம் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. போட்டியில் மேலும் 2 நாட்கள் மீதம் இருப்பதால் அதிசயம் நிகழ்ந்தாலன்றி இலங்கையினால் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போகும்.
இரண்டாவது இன்னிங்ஸில் நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். (1 – 2 விக்.)
முன்னாள் அணித் தலைவர்களான திமுத் கருணாரட்னவும் ஏஞ்சலோ மெத்யூஸும் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர் செய்தனர்.
திமுத் கருணாரட்ன 29 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 74 ஓட்டங்களாக இருந்தபோது தினேஷ் சந்திமால் காயத்திற்குள்ளாகி தற்காலிக ஓய்வுபெற்றார். மார்க் வூட் வீசிய மணிக்கு 149 கிலோ மீற்றர் வேகப் பந்து. தினேஷ் சந்திமாலின் வலது பெரு விரலைத் தாக்கியதால் அவர் 12 ஓட்டங்களுடன் ஓய்வுபெற நேரிட்டது.
தொடர்ந்து தனஞ்சய டி சில்வா 11 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். (95 – 4 விக்.)
இந் நிலையில் ஏஞ்சலோ மெத்யூஸும் கமிந்து மெண்டிஸும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.
அதுவரை மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த மெத்யூஸ் 145 பந்துகளை எதிர்கொண்டு 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து மிலன் ரத்நாயக்கவும் பின்னர் கமிந்த மெண்டிஸும் எல் பி டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்ததாக கள மத்தியஸ்தர் கிறிஸ் கவனி தீர்ப்பு வழங்கினார்.
ஆனால், மிலன் ரத்நாயக்கவும் கமிந்து மெண்டிஸும் மீளாய்வுக்கு உட்படுத்தியபோது கிறிஸ் கவனியில் இரண்டு தீர்ப்புகளும் மாற்றி அமைக்கப்பட்டது. ஏனெனில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் பந்து துடுப்பை உராய்து சென்றமை சலன அசைவுகளில் தெளிவாகத் தெரிந்தது.
மறுபக்கத்தில் சிறு ஆக்ரோஷத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த கமிந்து மெண்டிஸ் தனது 3ஆவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.
முதல் இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்த மிலன் ரத்நாயக்க, இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான அடி தெரிவினால் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (190 – 6 விக்.)
மொத்த எண்ணிக்கை 74 ஓட்டங்களாக இருந்தபோது 18ஆவது ஓவரில் உபாதைக்குள்ளாகி தற்காலிக ஓய்வு பெற்றுவந்த தினேஷ் சந்திமால் 56ஆவது ஓவரில் 6ஆவது விக்கெட் வீழ்ந்ததும் மீண்டும் துடுப்பெடுத்தாட களம் நுழைந்தார்.
போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது கமிந்து மெண்டிஸ் 56 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 109 பந்துகளை எதிர்கொண்ட கமிந்து மெண்டிஸின் ஆட்டம் இழக்காத இன்னிங்ஸில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கியிருந்தன.
பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து, சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றது.
தனது 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜெமி ஸ்மித் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது கன்னிச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.
148 பந்துகளை எதிர்கொண்ட ஜெமி ஸ்மித் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 111 ஓட்டங்களைப் பெற்றார்.
அத்துடன் 7ஆவது விக்கெட்டில் கஸ் அட்கின்சனுடன் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
மத்திய பின்வரிசையில் கஸ் அட்கின்சன் 20 ஓட்டங்களையும் மெத்யூ பொட்ஸ் 17 ஓட்டங்களையும் மார்க் வூட் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 103 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 85 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 73 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையம் வீழ்த்தினர்.
அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க தனது முதலாவது டெஸ்ட் விக்கெட்டாக கஸ் அட்கின்சனை ஆட்டம் இழக்கச் செய்தார்.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.