இந்தியா
Trending

எம்ஜிஆர் பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் ஆ.ராசா – சசிகலா கண்டனம்…!!!

இந்தியா: தமிழ்நாடு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் குறித்து திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆரை தான் மதிக்கமாட்டேன் என்றும், மேலும் சில விமர்சனங்களை ஆ.ராசா முன்வைக்கும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக ஆ.ராசாவை அதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆ.ராசா போன்றவர்கள் பேசுவதால் எம்ஜிஆரின் புகழை யாராலும் மறைக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சசிகலா வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஆரின் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர்கள் தான் திமுகவினர் என்றும், அதிலும் குறிப்பாக ஆ.ராசா போன்றவர் எம்ஜிஆரை பற்றி இழிவாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆரை இகழ்ந்து ஆ.ராசா பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது என்றும், அவரை பற்றி பேச ஆ.ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பிய சசிகலா, எம்ஜிஆர் யார் என்பதை அண்ணா நன்றாக புரிந்து வைத்து இருந்தார்.

திமுகவினரை 13 ஆண்டுகாலம் எதிர்க் கட்சியாகவே அமரவைத்த எம்ஜிஆர் எப்படிப்பட்டவர் என்பது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இவர்களை காட்டிலும் தமிழத்தில் பட்டி தொட்டியில் உள்ள அனைவருக்கும் எம்ஜிஆரின் அருமை பெருமைகள் பற்றி நன்றாகவே தெரியும் என்று கூறியுள்ளார்.

உயர உயரப் பறந்தாலும், ஊர்க் குருவி பருந்தாகுமா என்ற பழமொழிக்கு ஏற்ப ஆ.ராசா போன்ற வாய்ச் சவடால் வீரர்களுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் சசிகலா ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button