அவுஸ்திரேலியா
Trending

கடலில் நாயுடன் 2 மாதங்கள் தத்தளித்த அவுஸ்திரேலிய மாலுமி

அவுஸ்திரேலிய மாலுமி ஒருவர் இரண்டு மாதங்களாக தன்னுடைய நாயுடன் பசிபிக் கடலில் உயிரை பிடித்து கொண்டு தத்தளித்த நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த 51 வயதான டிம் ஷடாக்(Tim Shaddock) என்ற மாலுமி தன்னுடைய பெல்லா(Bella) என்ற வளர்ப்பு நாயுடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் மெக்சிகோவில் இருந்து பிரெஞ்சு பாலினேசியா-வுக்கு படகில் புறப்பட்டுள்ளார்.

ஆனால், டிம் ஷடாக் பயணத்தை தொடங்கிய சில வாரங்களுக்கு பிறகு அவருடைய படகு புயலால் கடுமையாக சேதமடைந்தது.

கிட்டத்தட்ட 6000 கி.மீ நெடும் பயணத்தை மெக்சிகோவில் இருந்து தொடங்கிய டிம் ஷடாக்-க்கு அதிர்ச்சி தரும்படியாக ஏற்பட்ட மோசமான வானிலை அவரது படகில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் பிரிவை சேதப்படுத்தியது.

இதனால் அவரும், அவரது வளர்ப்பு நாய் பெல்லா-வும் வடக்கு பசிபிக் பெருங்கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

இரண்டு மாதங்களாக கடலில் மிதந்த படி தத்தளித்த டிம் ஷடாக் உயிருடன் பிடித்த மீன்களை சாப்பிட்டும், மழை தண்ணீரையும் குடித்தும் உயிர் பிழைத்து வந்துள்ளார்.

காணாமல் போன அவுஸ்திரேலிய மாலுமி டிம் ஷடாக்கை ஹெலிகாப்டர் ஒன்று கண்டதை தொடர்ந்து, அவரும், அவருடைய வளர்ப்பு நாயும் இந்த வாரம் மீன்பிடி இழுவை படகு ஒன்றின் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

டிம் ஷடாக் மீட்கப்பட்ட போது மெலிந்த உடலுடனும், மிக நீண்ட தாடியுடனும் காணப்பட்டார், அப்போது அவரை பரிசோதித்த மீட்பு படகில் இருந்த மருத்துவர், அவர் மிதமான பாதிப்புகளுடன் நல்ல நிலையில் இருப்பதாக அவுஸ்திரேலிய செய்தி நிறுவனமான 9நியூஸிடம் தெரிவித்தார்.

மீட்பு பிறகு அவரிடம் இருந்து 9 நியூஸ் பெற்ற வீடியோவில் பேசிய அவர், மிகவும் கடுமையான சோதனையை நான் கடலில் அனுபவித்து இருக்கிறேன், எனக்கு நல்ல ஓய்வும், நல்ல உணவும் தேவைப்படுகிறது, மற்றப்படி நான் நல்லபடியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மீட்பு படகு மெக்சிகோவுக்கு திரும்பிய நிலையில், அவருக்கு கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button