இந்தியா
Trending

ஜான் பென்னி குயிக் சமாதியை கொஞ்சம் பாருங்க; செல்லூர் ராஜூ வேதனை – லண்டனில் இப்படி ஒரு சம்பவம்..!!

தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ லண்டன் சென்றுள்ள நிலையில், அங்கு ஜான் பென்னி குயிக் சமாதியை நேரில் பார்வையிட்டார். இவர் தான் தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய முல்லை பெரியாறு அணையை கட்டியவர். இவரது சமாதியின் நிலை குறித்து செல்லூர் ராஜூ வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜான் பென்னி குயிக் என்ற பெயரை கேட்டதும் தென் தமிழக மக்களின் முகத்தில் புன்னகை பூக்கும். விவசாயிகள் மனம் குளிரும். ஏனெனில் இவர் தான் தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையை கட்டியவர். ஆங்கிலேய பொறியாளரான இவர், லண்டனில் இருந்து 1890களில் இந்தியா வந்தார். மெட்ராஸ் மாகாண பொதுப்பணித்துறை பொறியாளராக நியமிக்கப்பட்டார்.

தென் தமிழகத்தின் வைகை பாசனத்தை நம்பியிருக்கும் மக்கள் மழை பொய்த்து பஞ்சத்தில் தவிப்பதை கண்டு மனம் வருந்தினார். முல்லை பெரியாறு அணைக்கான திட்டத்தை உருவாக்கி கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது சொத்துகளை விற்று அணையை கட்டி முடித்தார். இவரது நினைவை போற்றும் வகையில் தேனி மாவட்டம் கூடலூரில் மணி மண்டபம் கட்டி தென் தமிழக மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

ஜான் பென்னி குயிக்கின் சமாதி லண்டனில் இருக்கிறது. இந்நிலையில் லண்டன் சென்றுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பென்னி குயிக் சமாதியை நேரில் பார்வையிட்டார். அங்கிருந்த படி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், இந்த கல்லறைக்கு வந்தததற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். பென்னி குயிக் கல்லறையை பார்க்கும் போது மிகவும் மனம் வருத்தமாக இருக்கிறது.

தமிழகத்தில் ஆளும் திமுக அரசு இந்த கல்லறையை சீரமைத்து கொடுப்பதாக உறுதிமொழி அளித்திருந்தது. கல்லறை அருகில் பென்னி குயிக் சிலையை அமைக்க உரிய நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் அதற்கான பணத்தை கட்டவில்லை என்று சர்ச் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உருவாக்கி தந்தவருக்கு இப்படி ஒரு நிலையா? என்று எண்ணி பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. இதற்கான சீரமைப்பு வேலைகளை தமிழக அரசு செய்யாவிட்டால், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து நானே முன் நின்று நிதி ஒதுக்கீடு செய்து வேலைகளை நடத்தி முடிக்க முயற்சி செய்வேன்.

ஒருவேளை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இன்று இருந்திருந்தால், அவரிடம் இந்த கோரிக்கை வந்திருந்தால் உடனடியாக செய்து கொடுத்திருப்பார். இருப்பினும் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி மலரும் போது நிச்சயம் செய்து கொடுப்போம். அதற்கு முன்னதாக என்னுடைய முயற்சியால் மக்களை திரட்டி, அவர்களிடம் நிதி வசூல் செய்து பென்னி குயிக் கல்லறை மற்றும் சிலையை சீரமைப்பேன் என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பலரது கவனத்தை பெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button