பிரான்ஸ்
Trending

பிரான்சில் கொந்தளிப்பை ஏற்படுத்திய விவகாரம் – காவலில் வைக்கப்பட்டுள்ள 6 பேர்

பிரான்சில் கிராமிய நடன விருந்தில் கொல்லப்பட்ட இளைஞர் விவகாரம் அரசியல் சர்ச்சையை கிளப்பிய நிலையில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வார இறுதியில், க்ரெப்போவில் கூடியிருந்த ஒரு பண்டிகைக் கூட்டத்தில் வெளியாட்கள் குழு களமிறங்கியதை அடுத்து, ​​தாமஸ் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட 16 வயது மாணவர் கத்தியால் குத்தப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தாமஸ் மரணமடைந்தார். மேலும் 8 பேர் காயங்களுடன் தப்பிய நிலையில், அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியானது.

இந்த நிலையில், தாமஸ் கொலையுடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்கள் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர். இதில் மூவர் சிறுவர்கள் எனவும், எஞ்சியவர்கள் 19 முதல் 22 வயதுடையவர்கள் என கூறப்பட்டது.

கைது நடவடிக்கைகளுக்கு முன்பே, தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் சிலர், அரசு வீடுகளில் குடியிருக்கும் புலம்பெயர் மக்களில் சிலரே இளைஞர்கள் மீதான தாக்குதலை முன்னெடுத்ததாகக் குற்றம் சாட்டினர்.

புதன்கிழமை சுமார் 6,000 பேர்கள் திரண்டு தாமஸ் நினைவாக அஞ்சலி ஊர்வலம் மேற்கொண்டனர். இதனிடையே, 96 மணிநேர பொலிஸ் காவலுக்குப் பிறகு, தாமஸ் கொலையில் கைது செய்யப்பட்ட நபர்கள் சனிக்கிழமை வாலன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாகவும், ஆனால் குற்றத்தின் நோக்கம் மற்றும் விவரங்கள் இன்னும் முழுமையாக நிறுவப்படவில்லை என்று சட்டத்தரணிகள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, நடன அரங்கிற்குள் தொடங்கிய வாக்குவாதம், சந்தேக நபர்களில் ஒருவரின் சிகை அலங்காரம் குறித்த கருத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றே தெரியவந்துள்ளது.

இந்த வாக்குவாதம் அரங்கத்திற்கு வெளியே தொடரவே, சில கார்களில் மேலும் பலர் சம்பவயிடத்திற்கு வந்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்துள்ளதாக கைதானவர்கள் ஒப்புக்கொண்டாலும், கத்திக்குத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என்றே சாதித்து வருவதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button