இந்தியா
Trending

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பதவி – தேமுதிக பொதுக்குழு செயற்குழுவில் முக்கிய முடிவு..!!!

தமிழ்நாடு

எதிர்வரும் 14ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவரது மனைவி பிரேமலதாவும், மூத்த மகன் விஜய பிரபாகரனும் தான் கட்சிப் பணிகளை முழுமையாக கவனித்துக் கொள்கின்றனர். தமிழகமெங்கும் நடைபெறும் கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் தனது தந்தையின் பிரதிநிதியாக விஜய பிரபாகரன் தான் கலந்துகொள்கிறார்.

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் சினிமா பக்கம் ஹீரோவாக நடிக்க சென்றுவிட்டார். மூத்த மகன் விஜயபிரபாகரன் தான் அரசியல் பக்கம் வந்துள்ளார். ஆரம்பத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசி வந்த இவர் இப்போது பேச்சில் முதிர்ச்சியை காட்டுகிறார்.

தேமுதிக இளைஞரணியில் விஜய பிரபாகரனுக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்ற தகவல் பல மாதங்களாக உலா வந்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது அதற்கு செயல்வடிவம் கொடுக்க முடிவெடுத்துவிட்டார் பிரேமலதா விஜயகாந்த். ஏனெனில் அடுத்தடுத்து தேர்தல் பணிகள் வரவுள்ளதால் அதற்கு முன்னரே விஜய பிரபாகரனை கட்சியில் முக்கிய பதவியில் அமர வைக்க வேண்டும் என விரும்புகிறாராம்.

விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பதவி வழங்குமாறு ஏற்கனவே பல மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் வலியுறுத்தி வரும் நிலையில், வரும் 14ஆம் திகதி வளர்பிறை என்பதால் அன்றைய தினமே விஜய பிரபாகரனுக்கு தேமுதிகவில் முக்கியப் பதவி தரப்படலாம் எனத் தெரிகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றியும் தேமுதிக செயற்குழு பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், நேற்று காலை தான் வீடு திரும்பினார். அதற்கடுத்த சில மணி நேரங்களில் தேமுதிக பொதுக்குழு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button