உலகம்
Trending

265 ஆண்டாக பூட்டி வைக்கப்பட்டிருந்த காதல் கடிதங்கள் – படித்து பார்த்து அசந்துபோன பிரிட்டன் பேராசிரியர்…!!

18 ஆம் நூற்றாண்டில் 1757-58 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரெஞ்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையே போர் நடைபெற்றது. இந்த போரின் போது பிரெஞ்சு போர்க்கப்பலில் பணியாற்றிய மாலுமிகளுக்கு அவர்களது குடும்பத்தினர் நுற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி அனுப்பினர்.

போர்க்கப்பலில் பணியாற்றும் மாலுமிகளின் மனைவிகள், பெற்றோர்கள், காதலிகள் என அவர்களது நேசத்திற்கு உரியவர்கள் இந்த கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

கலேட்டே (Galatee) என்ற அந்த போர்க்கப்பலை பிரிட்டனின் ராயல் கடற்படை சிறைபிடித்து தங்கள் கட்டுப்பாட்டுகுள் கொண்டு வந்தது. அந்த சமயத்தில் தான் பிரெஞ்சு கப்பல் சிப்பந்திகளுக்கு அவர்களின் குடும்பத்தினர் எழுதி அனுப்பிய கடிதங்களையும் பிரிட்டன் கடற்படை பறிமுதல் செய்தது.

எந்த ஓரு கடிதத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு டெலிவரி செய்யாமல் தடுத்து வைத்தது. பிரெஞ்சு தபால் துறையும் பலமுறை இந்த கடிதங்களை உரியவர்களுக்கு சென்று சேர்க்க முயற்சித்துள்ளது. பல மாதங்களாக இது நடைபெற்று இருக்கிறது. பின்னர் 1757-58 ஆம் ஆண்டில் இந்த கப்பலை பிரிட்டன் சிறைபிடித்தது தெரியவந்ததும் அனைத்து கடிதங்களும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பின்னர் அங்கிருந்து லண்டனில் உள்ள கடற்படை நிர்வாக துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. கப்பல் சிப்பந்திகளுக்கு குடும்பத்தினர் எழுதி அனுப்பிய தனிப்பட்ட இந்த கடிதங்களை பிரிட்டன் கடற்படை, இதில் ஏதாவது ராணுவ தகவல் பகிரப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நுற்றுக்கணக்கான கடிதங்களை படித்து பார்த்து இருக்கிறார்கள்.

ஆனால், இந்த கடிதத்தில் வெறும் குடும்ப விஷயங்களே இருந்ததால், அவற்றை ஸ்டோரேஜ்களில் போட்டு வைத்து இருக்கிறார்கள். இந்த கடிதம் மூன்று நூற்றாண்டுகளாக அப்படியே பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதாவது தற்போது 265 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வியாளர்களின் கைக்கு கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் கியூ- நகரில் உள்ள தேசிய ஆவண காப்பகத்தில் உள்ள இந்த கடிதங்கள் இருந்த பெட்டியை பேராசிரியர் ரெனாட் மோரியக்ஸ் ஆர்வத்தில் திறந்து பார்த்துள்ளார். கிட்டத்தட்ட 104 கடிதங்கள் அந்த பெட்டியில் இருந்துள்ளன. இது குறித்து ரெனாட் மோரியாக்ஸ் கூறுகையில், இந்த தனிப்பட்ட கடிதங்களை எழுதிய பிறகு படித்து பார்க்கும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். இந்த கடிதத்தை படித்து பார்க்கும் போது குடும்பத்தினர் உணர்வுபூர்வமாக எழுதியிருந்ததை நினைத்து பார்க்க முடிந்தது. அந்த கப்பலில் பணியேற்றிய சிப்பந்திகள் பலரின் மனைவிகள், பெற்றோர்கள் மிக உருக்கமாக எழுதியிருக்கின்றனர். சிலரோ, எங்கு இருக்கிறீர்கள், எப்படி இருக்கீறீர்கள் என்று கூட எங்களுக்கு தெரியாது என மிகவும் உருக்கமாக எழுதியிருக்கிறார்கள் என்றார்.

இது தொடர்பாக ஆய்வையும் அந்த பேராசிரியர் மேற்கொண்டுள்ளார். இது குறித்த ஆய்வு Annales, Histoire, Sciences Sociales என்ற இதழில் வெளியாகியுள்ளது. மேலும் பேராசிரியர் கூறுகையில், இன்றைய கால கட்டத்தில் ஸூம், வாட்ஸ் ஆகியவை நம்மிடம் உள்ளன. ஆனால், 18 ஆம் நூற்றாண்டில் வெறும் கடிதங்கள் மட்டுமே மக்களிடம் இருந்தன. ஆனால், அவர்கள் உணர்வுப்பூர்வமாக எழுதியிருந்தது பரிச்சயமான ஒன்றாகவே இருந்தது என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button