ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 74 ஆவது பிரிவின் கீழ் அது குற்றமாகும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை விளம்பரப்படுத்தும் அடையாளங்கள், புகைப்படங்களுடன் கூடிய ஸ்டிக்கர்கள், கொடிகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கு அனைத்து பொலிஸ் அதிகார பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அவசர சோதனைகளை மேற்கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,041 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த முறைப்பாடுகளில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 2,947 முறைப்பாடுகளும் வன்முறைச் செயல்கள் தொடர்பாக 25 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளமையினால், எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை தேவைக்கேற்றவாறு மூடுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.