Homeஇலங்கை

மஹர சிறைச்சாலை விவகாரம் - சி.ஐ.டிக்கு புதிய உத்தரவு

மஹர சிறைச்சாலை விவகாரம் - சி.ஐ.டிக்கு புதிய உத்தரவு

11 கைதிகளின் மரணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

2020 ஆண்டு நவம்பரில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சிறை அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் குற்றம் எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் வெலிசர நீதவான் நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியிலேயே சட்டமா அதிபர் இந்த உத்தரவை விடுத்துள்ளார்.

மஹர சிறைக் கைதிகள் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பதை உறுதிப்படுத்த PCR சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளை முறையான சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரி கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி போராட்டம் நடத்தினர்.

இதன்போது சிறை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 கைதிகள் உயிரிழந்தனர்.

பின்னர் வெலிசர நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி தீர்ப்பை அறிவித்த வெலிசர நீதவான் துசித தம்மிக்க உதிவவிதான, மஹர சிறைச்சாலையில் 11 கைதிகள் கொல்லப்பட்டமை குற்றம் என தீர்மானித்தார்.

கிளர்ச்சியை அடக்குவதற்கு குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை சட்டமா அதிபர் முன்வைத்த போதிலும், இறந்த கைதிகள் சுடப்பட்ட விதம், கிளர்ச்சியை ஒடுக்குவதற்காகவோ அல்லது மனிதாபிமான நடவடிக்கைக்காகவோ சுடப்பட்டதாகத் தெரியவில்லை என நீதவான் குறிப்பிட்டார்.

குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான சாட்சியங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், 11 கைதிகளும் தலை, வயிறு, மார்பு போன்றவற்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக நீதவான் தனது தீர்ப்பில் மேலும் விளக்கினார்.

இதன்படி, மஹர சிறைச்சாலையில் கைதிகளின் உயிரிழப்புக்கள் குற்றமாகும் என தீர்மானித்த நீதவான், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சிறைச்சாலை மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

எவ்வாறாயினும், நீதிமன்றம் இவ்வாறானதொரு உத்தரவை பிறப்பித்துள்ள போதிலும், மஹர சிறைச்சாலையில் உள்ள 11 கைதிகளின் மரணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தரவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், குறித்த மஹர சிறைச்சாலை சம்பவத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சட்டரீதியாக செயற்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பாதுகாப்பு உரிமைகளை மீறி செயற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் 77ஆவது பிரிவின் பிரகாரம் சிறைச்சாலை அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மஹர சிறைச்சாலையில் 11 கைதிகளின் மரணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ள மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்,  இது சம்பந்தமான சட்டமா அதிபர் திணைக்களத்தின் கோப்பினை மூடவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button