நாங்கள் நடைமுறைக்கு சாத்தியப்படும் பல வகையான மாற்றுக் கருத்துகளுடனே தான் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வந்திருக்கின்றோம். அதே மாதிரி நுவரெலியா மாவட்டத்தில் பிறந்தவன் என்ற ரீதியில் எனக்கு மிகப்பெரிய கடப்பாடு காத்திருக்கின்றது. ஆகவே நுவரேலியா மாவட்டத்தினை மாற்றி காட்டுவதற்கு நாங்கள் முன் வந்திருக்கின்றோம் என நுவரெலிய மாவட்டத்தில் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை குழு 10ல் உதைப்பந்து சின்னத்தில் போட்டியிடும் குழுத் தலைவர் சாமிமலை ரூபன் எனப்படும் விமலாசாந்தன் தனரூபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…
அறிஞர் பெருமக்களின் கூற்றுப்படி மாற்றத்தினை எல்லோரும் விரும்பினாலும், மாற்றத்தை ஏற்படுத்த யாராவது முன்வர வேண்டும், அந்த அடிப்படையில் நாங்கள் அந்த மாற்றத்தினை ஏற்படுத்த முன்வந்துள்ளோம்…
நுவரெலியா மாவட்டத்தினை பொறுத்த மட்டில் பல வகையான பிரச்சனைகள் இருக்கின்றன, உதாரணமாக தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை மாத்திரமல்லாமல் இபிஎஃப் மற்றும் ஈடிஎஃப் போன்றவை பெறுவதில் உள்ள சிக்கல்கள் அத்துடன் மலையக பாதைகள் புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றமை இளைஞர் யுவதிகள் வேலையில்லா பிரச்சனைகள் என பல பிரச்சனைகள் இருக்கின்றது. ஆகவே அதற்கான தீர்வுகளும் எம்மிடம் இருக்கின்றதா? ஆகவே நாங்கள் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் இப்பிரச்சினைகளை நாங்கள் தீர்ப்பதோடு கண்டிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதையும் நாங்கள் உறுதி கூறிக்கொள்கின்றோம் என்றார்…
இதன் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு சுயேட்சை குழு 10ன் வேட்பாளர் பதிலளிக்கையில்…
நுவரெலியா மாவட்டத்தில் பல அரசியல் கட்சிகள் இருந்தாலும் நீங்கள் சுயாதீனமாக போட்டியிடுவதற்கான காரணம் என்ன என்று ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது…
அதற்கு நான் பதில் கூற வேண்டிய கடப்பாடு இருக்கின்றது, இருந்தாலும் உங்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கும் கடந்த 30 – 40 வருட காலமாக மலையகத்தைப் பொறுத்தளவில் எந்த அளவான விடயங்கள் நடைபெற்று இருக்கின்றது என்று… எந்த விதமான வேலைகள் செய்திருக்கின்றார்கள்…? 100 வீதமான வேலைகளில் 10 வீதமான வேலைகள் மாத்திரமே முடிவடைந்திருக்கின்றது. ஆகவே எங்களுடைய எண்ணமானது 100 வீதமான வேலைகளையும் செய்து முடிப்பதே ஆகும்…
எனக்கும் ஒரு கனவு இருக்கின்றது, நுவரெலியா மாவட்டம் மாத்திரம் இல்லாமல் மலையகத்திலிருந்து பெரும்பாலானவர்கள் கொழும்பில் வேலை செய்கின்றார்கள், அவர்களுக்காக ஒரு தொண்டு நிறுவனம் அமைத்து அவர்களுக்கு தங்குமிட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்கின்ற மிகப்பெரிய ஒரு கனவு எனக்கு இருக்கின்றது. ஆகவே மலையகத்து மக்களைப் பற்றி பார்த்தோமேயானால் மலையகத்தவர்கள் அனைவரும் நல்லவர்கள், அதனால் தான் இன்னுமே ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, நானும் ஏமாற்றப்பட்டவன் என்ற ரீதியில் தான் இந்த போட்டியில் களமிறங்கி இருக்கின்றேன் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துகளும் இல்லை… என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், நுவரெலியா மாவட்ட மக்களின் நன்மை கருதியும் எங்களுடைய நோக்கத்தினை கருத்திக்கொண்டும் எந்த அரசாங்கம் வந்தாலும் நுவரெலியா மாவட்ட மக்களின் நன்மை கருதி கண்டிப்பாக அந்த அரசாங்கத்திற்கு ஆதரவினை தெரிவித்து அவர்களினூடாக எமது மாவட்டத்தை இலங்கையின் முன்னோடி மாவட்டமாக மாற்றுவது தான் என்னுடைய கடப்பாடு என்றும் இதேவேளை நுவரெலியா மாவட்டம் என்னுடைய மாவட்டம், அதேபோல் நான் பிறந்து வளர்ந்த மாவட்டத்தை மாற்றுகின்ற அல்லது மாற்றத்தை ஏற்படுத்துகின்ற சந்தர்ப்பம் எனக்கு தற்பொழுது கிடைத்திருக்கின்றது. ஆகவே அதனையிட்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.