
சென்னை: அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக உள்ள நிர்மல் குமார், இன்றைய தினம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது போல் நாம் தமிழர் கட்சியில் இருந்த காளியம்மாளும் தவெகவில் இணைகிறார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலும் வந்துள்ளன. நிர்மல் குமாரின் ட்விட்டர் பக்கத்தில் அதிமுக பதவிகளையும், இரட்டை இலை சின்னத்தையும் நிர்மல் குமார் நீக்கியுள்ளார். ஏற்கெனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்தவர் சிடிஆர் நிர்மல் குமார். இவர் அந்த கட்சியில் இருந்து விலகி கடந்த 2023 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். நிர்மல் குமாரை பொருத்தவரை அவர் சிறந்த வியூக வகுப்பாளர். சமூகவலைதளங்களில் அரசுக்கு எதிராக முக்கிய பிரச்சினைகளை எழுப்புவார். அவர் தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்மல் குமார் இணைவதால் அக்கட்சிக்கு வலுசேர்க்கும் என்றே சொல்லப்படுகிறது. மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்படாத, ஒதுக்கப்படாத நிர்மல் குமார் தற்போது விஜய் கட்சியில் இணைவதால் அவருக்கு உரிய பதவியும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதிமுகவிலிருந்து நிர்மல் குமார் எதற்காக விலகுகிறார் என தெரியவில்லை.
ஆதவ் அர்ஜுனாவும் சிறந்த தேர்தல் வியூக வதகுப்பாளர், அவர் மாநாடு உள்ளிட்டவைகளை சிறப்பாக நடத்துவதில் வல்லவர். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்த போதே, அவர் நிரூபித்துவிட்டார். இவர்களை போல் ஏராளமான திறமையான இளைஞர்கள் தவெகவில் இணைவார்கள் என தெரிகிறது.