இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே அவரை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிணங்க, அவரது பதவி விலகல் குறித்த கடிதம் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நயீமுல்லாவுக்கும், அலிசப்ரி ரஹீமுக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடிதத்தைப் பொறுப்பேற்றுள்ள முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நயீமுல்லா, இது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 6 கோடி ரூபா பெறுமதியான, மூன்றரை கிலோ கிராம் தங்கத்தை, நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவந்த குற்றச்சாட்டில், முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரின் பயணப் பொதியில் இருந்து, 91 கைபேசிகளும் கைப்பற்றப்பட்டிருந்தன. இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், 7.5 மில்லியன் ரூபா அபாரதம் விதித்து அவர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது