வெறுங்கையுடன் கடலுக்கு சென்ற மீனவருக்கு கிடைத்த புதையல் – ஒரே நாளில் மொத்தமாக மாறிய வாழ்க்கை..!!!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள இப்ராஹிம் ஹைடேரி என்ற மீனவ கிராமத்தில் வசிக்கும் மீனவர் ஹாஜி பலோச். அவர் தனது சகாக்களுடன் இணைந்து அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் வலையில் அரிய வகை மீன் ஒன்று சிக்கியுள்ளது. பாகிஸ்தானில் இந்த வகை மீனைத் தங்க மீன் அல்லது “சோவா” என்று அழைப்பார்களாம். பொதுவாக இந்த வகை மீன்கள் ஒன்று அல்லது இரண்டு கிடைத்தால் அதுவே பெரிய விஷயம் ஆனால், அவர்களிடம் பல மீன்கள் ஒரே நேரத்தில் கிடைத்துள்ளன.
இதனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்ற அவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இதையடுத்து உடனடியாக கராச்சி துறைமுகத்திற்கு வந்த அந்த மீனவர்கள், அந்த அரிய வகை மீன்களை ஏலம்விட்டுள்ளனர். அப்போது அந்த மீன்கள் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 7 கோடிக்கு ஏலம் போனது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் அந்த மீனவர் ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். சோவா என்று அழைக்கப்படும் இந்த மீன் விலைமதிப்பற்றதாகவும் அரிதானதாகவும் கருதப்படுகிறது. இந்த சோவா மீனின் வயிற்றில் குறிப்பிட்ட சில பொருட்கள் இருக்கிறது. அவை உடலில் ஏற்படும் பல வித நோய் பாதிப்புகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது. மேலும், அந்த மீனில் ஒரு நூல் போன்ற ஒரு பொருள் கிடைக்கும். அது மருத்துவ அறுவை சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தப்படும்.
பொதுவாக ஒரு சோவா மீன் 20 முதல் 40 கிலோ எடை கொண்டதாகவும் 1.5 மீட்டர் வரை வளரக்கூடியதாகவும் இருக்கும். கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த மீனைப் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சோவா மீன் ஒன்றை ஏலம் விட்டாலே சுமார் 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும். இந்த மீனவர்கள் வலையில் மொத்தம் 10 மீன்கள் சிக்கிய நிலையில், அவை பாகிஸ்தான் ரூபாயில் 7 கோடிக்கு ஏலம் போய் உள்ளது. மருத்துவ நலன்களைத் தாண்டி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ரீதியாக சோவா மீன் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இதன் காரணமாகவே அது விலைமதிப்பு மிக்க மீனாக இருக்கிறது.
இது தொடர்பாக உள்ளூர் மீனவர்கள் கூறுகையில், நாங்கள் கராச்சியில் இருந்து சென்று அரபிக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது தான் இந்த தங்கப் புதையல் எங்களுக்குக் கிடைத்தது. எங்கள் குழுவில் மொத்தம் 7 மீனவர்கள் இருந்தார்கள். ஏழு பேருக்கும் இந்த தொகை பிரித்துத் தரப்படும் என்றார்.