பனிப்பிரதேசங்களை உள்ளடக்கிய ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழும் பகுதியாக உள்ளது. ஐஸ்லாந்தில் 300 க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இதனால், அங்கு நிலநடுக்கம் ஏற்படுவதும் அடிக்கடி நிகழும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், ஐஸ்லாந்தில் கடந்த நேற்று முன்தினம் (11) 14 மணி நேரத்தில் சுமார் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐஸ்லாந்தின் தென்மேற்கில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ச்சியான இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதி மக்கள் சற்று அச்சம் அடைந்தனர். தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டாலும் மிகக் கடுமையான அளவுக்கு ஏற்படவில்லை. அதிகபட்சமாக கிரிண்டாவிக் வடக்கு பகுதியில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது.
தொடர் நிலநடுக்கங்கள், எங்கு எந்த நேரத்திலும் எரிமலை வெடிக்கலாம் என்ற அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஐஸ்லாந்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் எரிமலை வெடிப்பு நிகழக்கூடுமென்று ஐஸ்லாந்து நாட்டின் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து கிரிண்டாவிக் கிராமத்தில் உள்ள எரிமலையை ஒட்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்டோபர் மாதத்தில் இருந்து தற்போது ஐஸ்லாந்தில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏர்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் கடந்த ஜூலை மாதம் ஒரே நாளில் 2,200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு இப்போது 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பு எப்போது வேண்டும் என்றாலும் நிகழக்கூடும் என்பதால் அங்கு 3 இடங்களில் தகவல் மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.. முன்னெச்சரிக்கையாக, கிரிண்டாவிக் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான ப்ளூ லகூன் மூடப்பட்டுள்ளது.