6 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து – குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!
தமிழ்நாடு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது யூனிட் விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழ்நாடு அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டு ரோட்டில், கடந்த ஜுலை 2ஆம் திகதி காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில், விவசாயிகள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த போராட்டத்தின் 124-வது நாளான கடந்த நவம்பர் 2ஆம் திகதி, மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, நியாய விலை கடை அட்டை ஆகியவற்றை செய்யாறு சார் ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 125 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே வழக்குகளில் தொடர்புடைய அருள் என்பவர் மற்றும் 6 நபர்கள் திருவண்ணாமலை போலீசாரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் குடும்பத்தினர் செய்யார் எம்.எல்.ஏவை சந்தித்து அவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து, செய்யார் எம்.எல்.ஏவுடன் குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் குடும்பத்தினர், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவை நேரடியாக முதல்வரிடம் கொடுத்து, அவர்கள் மீதான குண்டர் சட்டத்தில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை இந்த தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் மேற்கொள்வேன் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செய்யாறு சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டத்தின் போது, சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்து, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதன் காரணமாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.