நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா விஜயன், சத்யன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 10ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியானது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம். இந்தப் படம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டில் இந்தப் படத்தின் முதல் பாகமான ஜிகர்தண்டா வெளியானது.
தற்போது அவரது இயக்கத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அடுத்தடுத்து கோவை உள்ளிட்ட மாவட்ட மக்களை கார்த்திக் சுப்புராஜ், எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் சந்தித்து வந்தனர். இரு தினங்களுக்கு முன்பு கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இவர்கள், படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்தனர். படத்தின் மூன்றாவது பாகம் கண்டிப்பாக உருவாகும் என்றும் ஆனால் சில ஆண்டுகள் ஆகலாம் என்றும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மட்டுமின்றி, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தினரும் கலந்துக் கொண்டனர். இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மிகவும் எளிமையான முறையில் இந்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. படம் வெளியாகி 8 நாட்களை கடந்துள்ள நிலையில் சர்வதேச அளவில் படம் 47 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் இநத வாரத்தில் படத்தின் வசூல் 50 கோடி ரூபாய்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே படம் 31 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டியுள்ளதாகவும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.