மூணு வருஷமா என்ன பண்ணிட்டு இருந்தீங்க? – ஆளுநருக்கு கிடுக்கி பிடி போட்ட உச்ச நீதிமன்றம்!
தமிழ்நாடு
தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு ஆளுநருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை நீடித்து வந்தது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். பொறுத்து பார்த்த தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதிரடி காட்டியது.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டின் 8 கோடி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்துகொண்டிருக்க முடியாது” என்று வாதங்களை அடுக்கினார்.
இதனைத் தொடர்ந்து வாதம் வைத்த மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, “கடந்த 2020ம் ஆண்டு முதல் 13க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கால தாமதம் செய்கிறார். சட்டப்பிரிவு 200 என்பதற்கு நிறுத்தி வைக்கிறேன் என்று அர்த்தமல்ல. அது எதையும் குறிக்காது. அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். தான் சம்மதிக்கவில்லை என்று மட்டும் ஆளுநர் கூற முடியாது. ஆனால், காரணமே இல்லாமல் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்” என்று தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா தவறாக இருந்தாலும் அதனை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு என்ன உரிமை உள்ளது என்றும், 2ஆம் முறையாக நிறைவேற்றி அனுப்பியுள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழக அரசு வாதங்களை முன்வைத்தது.
இதனைக் கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி, “இந்த மசோதாக்கள் ஜனவரி 2020 முதல் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றம் நவம்பர் 10ஆம் திகதி ஆளுநர் தரப்புக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்குப் பின்னர் மசோதாக்களை ஏன் திருப்பி அனுப்ப வேண்டும். அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் வரை ஆளுநர்கள் ஏன் காத்திருக்க வேண்டும்? கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? எந்த முடியும் எடுக்காமல் மசோதாக்களை ஆளுநர் எப்படி நிலுவையில் வைத்திருக்க முடியும்” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, வழக்கினை வரும் 24ஆம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளார்.