பிரெஞ்சு கிராமம் ஒன்றில் நடைபெற்ற திருவிழா ஒன்றில் திடீரென புகுந்த சில இளைஞர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதில், ஒரு இளைஞர் பலியானார் பலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை, பிரான்சிலுள்ள Crépol என்னும் கிராமத்தில் திருவிழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்துள்ளது. சுமார் 450 முதல்500 பேர் வரை திருவிழாவில் கலந்துகொண்டுள்ளார்கள்.
அப்போது திடீரென ஒரு கூட்டம் இளைஞர்கள் கத்தியுடன் அங்கு வந்துள்ளார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் மீது அவர்கள் திடீர்த் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் அவர்களைத் தடுக்க முயல, அவரது கைவிரல்களை கத்தியால் கீறியுள்ளார்கள் அவர்கள்.
அப்போது, அங்கு கூடியிருந்தவர்களில் தைரியசாலிகள் சிலர் அந்த இளைஞர்களைத் தடுக்க முயன்றுள்ளார்கள். அவர்களில் சிலருக்கும் கத்திக் குத்து விழுந்துள்ளது.
23 மற்றும் 28 வயதுள்ள இருவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
காயமடைந்த மற்றொருவரின் நிலைமையில், நேற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், தாமஸ் என்னும் 16 வயது இளைஞர் கத்தியால் குத்தப்பட்டதில் உயிரிழந்துவிட்டார். குத்தப்பட்ட ரக்பி விளையாட்டு வீரரான தாமஸ், Lyon என்னும் நகரிலுள்ள மருத்துவமனைக்கு ஹெலிகொப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.