இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இதனிடையே, காசாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகின்றது. மேலும், இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவத்தால் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் தலைவரும், உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் காசா மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ‘எக்ஸ் வலைதளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானத்தையும், போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.