எப்போதும் தனிமை; அன்பிற்கு ஏங்கும் பிஞ்சு மனம் – உலகை உறைய வைத்த தென் கொரிய சிறுவன்…!!!
தென் கொரியாவில் ஒளிபரப்பாகும் ‘மை கோல்டன் கிட்ஸ்’ என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அங்கே கடந்த 21ஆம் திகதி இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு எபிசோட் அனைவரையும் அதிர வைப்பதாக இருக்கிறது.
அந்த வீடியோவில் 4 வயது சிறுவனான கியூம் ஜி-யூன் என்ற சிறுவன் பேசிய பேச்சு அனைவரது மனதையும் நெகிழ வைப்பதாக இருந்தது.
அந்த வீடியோவில் கியூம் ஜி-யூன் என்ற அந்த சிறுவன் தனது பெற்றோர் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது உடைந்து அழ தொடங்கினார். ‘மை கோல்டன் கிட்ஸ்’ என்ற இந்த நிகழ்ச்சி பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு குறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை பெறும் ஒரு நிகழ்ச்சியாகும். அதில் தான் இந்த 4 வயது சிறுவன் கியூம் ஜி-யூன் தனிமையில் தவிப்பதாகத் தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் சிறுவனிடம் உனக்கு அப்பா, அம்மா இருவரில் யாரைப் பிடிக்கும் என்று கேட்கிறார்கள். அதற்கு அந்த சிறுவன், “எனக்குத் தெரியவில்லை வீட்டில் நான் எப்போதும் தனியாகத் தான் இருப்பேன். என்னுடன் யாரும் விளையாட மாட்டார்கள். தனியாகவே எப்போதும் இருப்பேன்” என்கிறார்.
அப்பா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தனது தந்தை கோபமாக இருக்கும் போது அச்சுறுத்தும் வகையில் இருப்பார் என்றும் தன்னிடம் அன்பாகப் பேச வேண்டும் என்று நினைப்பதாகவும் அந்த சிறுவன் தெரிவித்தார். தாய் குறித்து கேட்ட போது, “அவருக்கு என்னை பிடிக்கவில்லை என நினைக்கிறேன்” என்று கூறும் போது அந்த சிறுவனின் கண்களில் இருந்து நீர் கொட்டுகிறது.
அதன் பிறகு சில நொடிகள் அமைதியாக இருந்த அந்த சிறுவன் மீண்டும் தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்து பேசத் தொடங்கினான். “என் அம்மா நான் சொன்னதை எப்போதும் கேட்டதே இல்லை. எனக்கு அவருடன் விளையாட வேண்டும் என ஆசை. ஆனால், அவர் எப்போதும் என்னைத் திட்டிக் கொண்டே இருப்பார்.
ஒரு முறை நான் கலை சார்ந்த பள்ளியில் படிக்க வேண்டும் எனச் சொன்னேன். அதற்கு என்ன அம்மா, நான் பார்க்க அழகாக இல்லை என்றும் இதனால் கலை பள்ளிக்கெல்லாம் அனுப்ப முடியாது என்று கூறினார்.
இந்த வீடியா இணையத்தில் வெளியாகி மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குழந்தைகளை முறையாக வளர்க்க முடியவில்லை என்றால் எதற்காகப் பெற்றுக் கொள்கிறார்கள் என்று நெட்டிசன்கள் பலரும் சாடினர். பெற்றோர்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளுக்கு எந்தளவுக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்படும் என்பதற்கு இதுவே சாட்சி என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அந்த சிறுவனுக்கு இருந்த முதிர்ச்சியில் சிறியளவில் கூட அவர்கள் பெற்றோருக்கு இல்லை என்றும் சாடியுள்ளனர்.
அந்த வீடியோவில் அந்த சிறுவனின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதில் இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை என்றும் பாட்டியிடம் தான் குழந்தை வளர்வதாகவும் அவர்கள் தெரிவித்தார்.
அதேநேரம் தாங்கள் கோபமடைவதால் இந்தளவுக்குக் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று நினைத்ததே இல்லை என்றும் தெரிவித்தனர். பெற்றோருக்கு வல்லுநர்கள் ஆலோசனை கொடுத்த நிலையில், குழந்தையுடன் அதிக நேரத்தைச் செலவிடப் பெற்றோர் உறுதியளிப்பதுடன் அந்த எபிசோட் நிறைவடைந்தது.