சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது தான் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், அங்கு திடீரென ஒரு வித மர்மக் காய்ச்சல் குழந்தைகளிடம் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளது. சீனாவில் இப்போது மூச்சுத் திணறல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 12ஆம் திகதி செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகள், சீனா முழுவதும் சுவாச பாதிப்பு அதிகரித்துள்ளது உண்மைதான் என்றனர்.
இருப்பினும், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இன்ஃப்ளூயன்ஸா, சார்ஸ், RSV, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா ஆகியவை இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குழந்தைகளிடையே பரவும் இந்த திடீர் நிமோனியா பாதிப்பு குறித்து சர்வதேச நோய் கண்காணிப்பு அமைப்பான ப்ரோமெட் அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெய்ஜிங் மற்றும் லியோனிங் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகளவில் அனுமதிக்கப்படுவதாகச் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. இந்த இரு நகரங்களுக்கும் இடையே 800 கிமீர தொலைவு இருக்கிறது. இதன் மூலம் இந்த நிமோனியா பாதிப்பு ஓரிடத்தில் மட்டும் ஏற்படவில்லை. அவை பரவ தொடங்கிவிட்டது என்பது தெரிய வருகிறது.
மேலும், பள்ளிகளில் இந்த பாதிப்பு ஏற்படும் நிலையில், இதனால் ஆசிரியர்கள் மற்றும் இதர பள்ளி ஊழியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அங்குள்ள பல பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. நிலைமை இப்படியே தொடரும் நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்போது தொடங்கப்படும் எனத் தெரியவில்லை. அங்கே பல இடங்களில் என்ன காரணம் என்றே தெரியாமல் பலருக்கும் சுவாச பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக மாணவர்கள் இந்த நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பல நோய்க்கிருமிகள் இணைந்து இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும், துல்லியமான தகவல்கள் இருந்தால் மட்டுமே இது பிரச்சினைக்குரிய நோய்க்கிருமி ஒன்றா இல்லை கொரோனா லாக்டவுன் இல்லாமல் வந்த முதல் குளிர்காலம் என்பதால் ஏற்பட்ட பாதிப்பா என்பது தெரிய வரும்.