உலகம்
Trending

பூமியை நோக்கி பாயும் காஸ்மிக் கதிர்கள் – நட்சத்திர வெடிப்பை விட மோசமாம்…!!

அரிய மற்றும் அதிக ஆற்றலைக் கொண்ட காஸ்மிக் கதிர்களை விண்வெளியில் இருந்து பூமியை நோக்கிப் பாய்வதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனை ஆய்வாளர்கள் அமேடெராசு என்று அழைக்கிறார்கள். இந்த அமேடெராசு தான் இதுவரை கண்டறிந்த அதீத ஆற்றல் கொண்ட காஸ்மிக் கதிராக இருக்கிறது.

இது எங்கே இருந்து பூமியை நோக்கி வருகிறது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும், மிகவும் சக்திவாய்ந்த வான நிகழ்வுகளில் மட்டுமே இது உருவாகும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நட்சத்திர வெடிப்பை விடப் பெரிய நிகழ்வுகள் மட்டுமே இதை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது குறித்து அமெரிக்காவில் உள்ள உட்டா பல்கலைக்கழக வானியல் ஆய்வாளர் ஜான் மேத்யூஸ் கூறுகையில், பொதுவாக சூப்பர்நோவா போன்ற நிகழ்வுகள் தான் அதீத ஆற்றல் வாய்ந்தவை என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால், அதை எல்லாம் விட இதில் அதீத ஆற்றல் இருக்கிறது. இந்தளவுக்கு வலிமையான காஸ்மிக் கதிர்களை உற்பத்தி செய்ய அதீத ஆற்றல் தேவை, இவ்வளவு தூரத்திற்கு இந்த வேகத்தில் இவை வருகிறது என்றால் அங்கே உருவாகியிருக்கும் ஆற்றல் மற்றும் காந்தப்புலங்கள் எந்தளவுக்கு இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்றார்.

பொதுவாக ஒரு நட்சத்திரம் அதன் வாழ்நாளின் இறுதியில் வெடித்துச் சிதறி அழிந்து போகும். அதைத்தான் ஆய்வாளர்கள் சூப்பர்நோவா என்று குறிப்பிடுவார்கள். அது மிக மிக வலிமையானதாக இருந்துள்ள நிலையில், அதைக் காட்டிலும் இந்த அமேடெராசு வலிமையாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அமேடெராசு காஸ்மிக் கதிர்கள் 240 EeV ஆற்றலைக் கொண்டிருக்கிறது. இவை மனிதர்கள் இதுவரை உருவாக்கியதிலேயே மிகவும் வலிமையானதைக் காட்டிலும் பல லட்சம் மடங்கு அதிக சக்திவாய்ந்ததாக இருக்கிறது. கடந்த 1991இல் கண்டறியப்பட்ட ஓ மை காட் துகள்கள் 320 EeV ஆற்றலைக் கொண்டிருந்த நிலையில், அதற்குப் பிறகு அதீத ஆற்றலைக் கொண்ட துகள்களாக இது இருக்கிறது.

பொதுவாக அதீத சக்திவாய்ந்த காஸ்மிக் கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தைத் தாக்கும் போது, ​​அவை இரண்டாம் நிலை கதிர்கள் மற்றும் மின்காந்த கதிர்வீச்சை உருவாக்கும். சார்ஜ் செய்யப்பட்ட இவை ஒரு வகையான மின்காந்த கதிர்வீச்சை உருவாக்குகின்றன. நம்மிடம் இருக்கும் ஒருவித சிறப்புக் கருவிகள் மூலம் இதை நாம் கண்டறியலாம். அதை வைத்தே இப்போது இந்த அதீத சக்திவாய்ந்த கதிர்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விண்வெளி பல மர்மங்களைக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமே இந்த அமேடெராசு காஸ்மிக் கதிர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வரும் காலத்தில் இது குறித்துக் கூடுதல் ஆய்வுகளில் மேலும் பல புதிய தகவல்கள் தெரிய வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button