பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வந்தது. அவர் பிரதமராக இருந்தபோது பரிசாக கிடைத்த பொருட்களை கருவூலத்தில் வழங்காமல் ஊழல் செய்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்பாது இம்ரான் கான் இன்னொரு சிக்கலில் மாட்டியுள்ளார்.
அதாவது இம்ரான் கான் மீதும், அவரது 3வது மனைவி புஷ்ரா பீபி (வயது 49) ஆகியோருக்கு எதிராக இஸ்லாமபாத் கிழக்கு சீனியர் சிவில் நீதிபதி குத்ரத்துல்லா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடர்ந்தவர் இம்ரான் கானின் மனைவியான புஷ்ரா பீபியின் முன்னாள் கணவர் கவார் பரித் மேனகா ஆவார். இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
இம்ரான் கானும், புஷ்ரா பீபியும் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டனர். என் திருமண வாழ்க்கையை இருவரும் சீரழித்துவிட்டனர். இவர்கள் மீது பாகிஸ்தான் தண்டனை சட்டப்பிரிவு 34 (பொதுநோக்கத்துடன் குற்றம் புரிதல்), 496 (சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்ட மோசடி திருமணம்) மற்றும் 496 (திருமணம் செய்யாமல் உறவு வைத்து கொள்ளுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார். மேலும் இந்த மனுவின் விசாரணையின்போது கவார் பரித் மேனகா எழுத்துப்பூர்வ ஆதாரத்தை தாக்கல் செய்தார்.
இதையடுத்து வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள இஸ்தேகாம்-இ-பாகிஸ்தான் கட்சி உறுப்பினர் அவ்ன் சவுத்ரி, இம்ரான்கான் -புஷ்ரா பீபியின் திருமணத்தை முன்னன்றி நடத்திய முஃப்தி முகமது சயீத் மற்றும் கவார் பரித் மேனகாவின் வீட்டு பணியாளர் லத்தீப் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதோடு, வழக்கு விசாரணைக்கு நவம்பர் 28 ம் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதனால் இம்ரான் கானுக்கு சிக்கல் உருவாகி உள்ளது.