ஈடு இணையில்லாத தலைவனின் நினைவு நாளில் கருணாநிதிக்கு விழா எடுப்பீங்களா? – கொந்தளித்த ஜெயக்குமார்..!!
தமிழ்நாடு
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் சார்பில் வரும் டிசம்பர் 24 ஆம் திகதி நூற்றாண்டு விழா நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மிக பிரம்மாண்டமாக இந்த விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
நடிகர் சங்கத்தின் கட்டிடம் உருவாவதற்கு நிலம் வாங்க உதவியவரே எம்ஜிஆர் தான். நடிப்பில் மட்டுமல்ல. நிர்வாகத்திலும் ஈடு இணையில்லாத தலைவன் அவர். மறைந்தாலும் வாழும் சகாப்தம்.
அந்த வாழும் சகாப்தத்தின் நினைவு நாளில் இப்படி கருணாநிதிக்கு விழா எடுக்கலாமா? எம்ஜிஆரோட நூற்றாண்டுக்கு நடிகர் சங்கம் விழா எடுக்கவில்லை. அதை விடுங்கள், ஆனால், எம்ஜிஆரோட நினைவு நாள் அன்று எதற்கு கருணாநிதிக்கு விழா எடுக்குறீர்கள் என்று தான் கேக்குறேன்.
தங்கள் தலைவனை இழந்து தமிழ்நாடே டிசம்பர் 24 ஆம் திகதி கண்ணீரும் கம்பளையுமாக இருக்கும் நாளில், இந்த விழாவை எடுப்பதற்கான அவசியம் என்ன? கோடானு கோடி பேர் துக்கமாக இருக்கும் நாளில் உங்களுக்கு கொண்டாட்டமா? எனவே நடிகர் சங்கம் இந்த விழாவை வேறு திகதியில் நடத்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஜெயக்குமார் கூறினார்.