புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும் திறைசேரி மற்றும் வங்கிகளால் இதுவரை அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீர்வை வரியற்ற நிவாரணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட போதிலும் சுங்க திணைக்களத்தினால் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
சில அரச அதிகாரிகளின் செயற்பாடுகளினால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்னெடுக்கும் சாதகமான வேலைத்திட்டங்களுக்கு சில அரச அதிகாரிகள் ஆதரவளிக்காமல் இருப்பது வருத்தமளிக்கும் விடயம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நேற்று முன்தினம் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.