ஹமாஸ் பிடியிலிருந்த பிரெஞ்சு இளம்பெண் விடுவிப்பு – மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரான்ஸ் ஜனாதிபதி
அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேலுக்குள் நுழைந்து, இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த 260 பேரை கொடூரமாக படுகொலை செய்தார்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினர்.
அத்துடன், சுமார் 240 பேரை, பிணைக்கைதிகளாகவும் பிடித்துச் சென்றது ஹமாஸ் ஆயுதக்குழு.
தற்போது, கத்தார் முதலான சில நாடுகளின் தலையீட்டைத் தொடர்ந்து, பிணைக்கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து வருகிறது ஹமாஸ் அமைப்பு.
ஹமாஸ் தாக்குதல் நடத்திய அன்று, அரை நிர்வாணமாக ஜேர்மன் இளம்பெண் ஒருவரை தங்கள் வாகனத்தில் தூக்கிப்போட்டுக்கொண்டு, அவள் மீது காலைவைத்தபடி உலாவந்தனர் ஹமாஸ் குழுவினர்.
அதேபோல, ஹமாஸ் பிடியிலிருந்த, காயமடைந்த பிரெஞ்சு இளம்பெண் ஒருவரைக் காட்டும் வீடியோ ஒன்றும் வெளியானது. இந்த வீடியோக்களால் அப்போது பெரும் பரபரப்பு உருவானது. பிரான்ஸ் அரசாங்கமும் அந்த வீடியோ தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டவரான அந்த இளம்பெண் தற்போது ஹமாஸ் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது பெயர் மியா (Mia Schem, 21). மியாவும், Amit Soussana என்னும் பெண்ணும், அதைத் தொடர்ந்து, மேலும் ஆறு பிணைக்கைதிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மியா விடுவிக்கப்பட்ட செய்தி கேட்டு அவரது தாயார் Keren ஆனந்தக் கூச்சலிடும் காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மியாவின் தந்தை டேவிடும், தனது மகள் விடுவிக்கப்படும் நாள் தன் வாழ்நாளிலேயே மகிழ்ச்சியான நாள் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், பிரெஞ்சு இஸ்ரேலியரான மியா விடுவிக்கப்பட்ட செய்தி அறிந்து தான் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.