தமிழ்நாடு
வங்க கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிச.3) நேற்று புயலாக உருவானது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று, நண்பகல் 12மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டது.
மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து இப்புயல் நெல்லூர்- மசூலிப்பட்டிணம் இடையே கரையை கடக்க உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் மிக்ஜாம் புயலின் தாக்கம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், மிக கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் மரம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை வரை 340 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது கடந்த 47 ஆண்டுகள் வரலாற்றில் பெய்யாத கனமழை ஆகும். இதற்கு முன்னதாக சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது பெய்த மழையின் அளவு 340 மி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது.