இலங்கையின் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் 80 வீதமானோர், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார பணிப்பாளர், வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கொழும்பு நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அநேகமானோர் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு நுளம்புகள் பதிவாகும் இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
அதனை தவிர, தெஹிவளை, பத்தரமுல்ல, கடுவளை ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டார்.
மழையுடனான வானிலையினால் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 76,847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதுவரையான காலப்பகுதியில் 46 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.