அடுத்த தலைமுறைக்கு நல்ல உலகத்தை கொடுப்போம் – ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உதவிக்கரம் நீட்டும் டென்மார்க்..!!
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தொழில்நுட்பங்களில் டென்மார்க் உலகிற்கே முன்னோடியாக உள்ளது. எதிர்கால சந்தியினருக்கு பாதுகாப்பான உலகை வழங்க வேண்டும் என்பதற்காக, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தனக்கு இருக்கும் நிபுணத்துவத்தை உலகின் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் டென்மார்க் தயாராக உள்ளது.
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உதவ டென்மார்க் முன்வந்துள்ளது. டென்மார்க் நாட்டின் வெளியுறவு துறையின், ஹெட் ஆஃப் மிஷன் மற்றும் கவுன்சல் ஜெனரலான லார்ஸ் ஸ்டீன் நீல்சன் சமீபத்தில் துபாயில் உரையாற்றினார். இதன்போது அவர் கூறியதாவது..
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் டென்மார்க் ஏற்கனவே நிபுணத்துவம் பெற்றதாக உள்ளது. நிலைத்தன்மை வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான தொழில்நுட்பங்களை கொண்ட சிறந்த நாடுகளில் ஒன்றாக டென்மார்க்கை ஐநா சபை பெருமைப்படுத்தியுள்ளது.
நிலைத்தன்மை என்பது, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை வேண்டாம் என ஒதுக்கி விடாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது ஆகும். வரும் 2030-ம் ஆண்டுக்குள் CO2 உமிழ்வை 70 சதவிகிதம் குறைக்கும் நோக்கத்துடன் டென்மார்க் செயல்பட்டு வருகிறது. அரசாங்கம், தனியார் தொழில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் டென்மார்க்கின் முயற்சிகள், அதன் எல்லைக்குள் மட்டும் நின்று விடவில்லை. மற்ற நாடுகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
உலக அளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற டென்மார்க்கின் குறிக்கோளை இது வெளிக்காட்டுகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் வலுவான உறவுகளை உருவாக்குவதில் டென்மார்க் ஆர்வமாக இருக்கிறது. விவசாயம், உணவு பொருட்கள் வீண் ஆவதை குறைத்தல் மற்றும் பசுமை தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் போன்ற துறைகளில், தனது திறமையை ஐக்கிய அரபு அமீரகத்துடன் பகிர்ந்து கொள்ள டென்மார்க் அதிக ஆர்வம் காட்டுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு பசுமையான எதிர்காலத்தை வழங்க வேண்டும். அதில் எங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று லார்ஸ் ஸ்டீன் நீல்சன் கூறியுள்ளார்.