நிவாரணப் பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!!
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக தமிழ்நாடு முதலமைச்சரும், அமைச்சர்களும், திமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரசு, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலம் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா, மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.