எங்களை யாரும் தடுக்க முடியாது; காஸாவில் வெற்றி பெறும் வரை இஸ்ரேல் இராணுவம் போரிடும் – நெதன்யாகு…!
காஸாவில் இறுதி வரை இஸ்ரேல் இராணுவத்தின் போராட்டம் தொடரும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
போர்நிறுத்தத்திற்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
இறுதிவரை போராட்டம் தொடரும் என்று கூறிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “மிகுந்த வேதனையுடன் இதை சொல்கிறேன், சர்வதேச அழுத்தங்களால் எம்மைத் தடுக்க முடியாது. வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.” என்று கூறியுள்ளார்.
காசாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச் சபை செவ்வாய்க்கிழமை கட்டாய தீர்மானத்தை நிறைவேற்றிய சிறிது நேரத்திலேயே நெதன்யாகுவிடமிருந்து இந்த அறிக்கை வெளிவந்தது.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச ஆதரவு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் ஹமாஸுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடரும் என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் கூறியுள்ளார்.
இஸ்ரேல் சர்வதேச ஆதரவை இழந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூறியதை அடுத்து வெளியுறவு அமைச்சர் இந்த கொள்கையை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமைச்சரவையை கலைக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோரியுள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.