சொந்தநாட்டு பிணைக் கைதிகளை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் இராணுவம் – ஹமாசிடம் இருந்து தப்பி வந்த 3 பேருக்கு நேர்ந்த கதி…!!
வடக்கு காசா பகுதியில் தாக்குதலை முன்னெடுத்து வரும் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் ஆபத்து என கருதி தவறுதலாக 3 பிணைக் கைதிகளை சுட்டுக் கொன்று இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
காசாவின் Shejaiya பகுதியில் நடைபெற்று கொண்டு இருந்த சண்டையின் போது படைகளை நோக்கி வந்ததால் ஆபத்து என கருதி இஸ்ரேலிய வீரர்கள் சுட்டதாக IDF செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இஸ்ரேலிய பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதித்த பிறகு தான் அவர்கள் இஸ்ரேலிய பிணைக் கைதிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
பிணைக் கைதிகள் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் பெயர் யோதம் ஹைம், மற்றொருவரின் பெயர் சமர் தலால்கா, மூன்றாவது நபரின் பெயர் விவரத்தினை அவரது குடும்பத்தினர் வெளியிட விரும்பவில்லை.
இவர்கள் மூன்று பேரும் அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்டுள்ளனர் என்றும், மூவரும் அவர்களது சிறைப்பிடிப்பாளர்களிடம் இருந்து தப்பித்து இருக்க வேண்டும் என இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ள இஸ்ரேல் ராணுவம், வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்து இருக்கிறது.