தமிழ்நாடு
1996-2001-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ1.36 கோடி பொன்முடி சொத்து குவித்தார் என 2011-ல் தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்டோரை ஜூன் மாதம் விடுதலை செய்தது. ஆனால் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார்.
இதனால் நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார். இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக 64.09% பொன்முடி சொத்து குவித்திருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த வழக்கில் பொன்முடி குற்றவாளி; பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 (நாளை) அறிவிக்கப்படும்; அன்றைய தினம் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி. தமிழ்நாடு அரசியலில் இந்த வழக்கின் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு நாளை தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது. பொதுவாக மக்கள் பிரதிநிதிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர்களது எம்பி, எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படும். இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோகுமா இல்லையா என்பது நாளை தெரியவரும்.