செய்யாத குற்றத்திற்கு 48 வருடங்கள் சிறைவாசம்; 70 வயதில் விடுதலையான நிரபராதி – அமெரிக்காவில் சம்பவம்…!!
அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் கடந்த 1975ம் ஆண்டு மதுக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் என்ற இளைஞர் மற்றும் டான் ராபர்ட்ஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் க்ளின் சிம்மன்ஸ், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் தான் லூசியானா மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலையில் தனக்கு சம்பந்தம் இல்லையென்றும் கூறி வந்தார். ஆனால், நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி, பின்னர் மரண தண்டனை சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது.
சிறை தண்டனை பெற்றபோது சிம்மன்ஸிற்கு 22 வயது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கு மறுவிசாரணைக்கு வந்தபோது, சிம்மன்ஸ் குற்றமற்றவர் என கூறி தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனையடுத்து சிம்மன்ஸ் விடுதலையானார். குற்றமே செய்யாமல் 48 வருட கால சிறைத் தண்டனை அனுபவித்ததை குறித்து சிம்மன்ஸ் கூறியதாவது “பொறுமைக்கும் மன உறுதிக்கும் இது ஒரு பாடம்.நடக்காது என யார் கூறினாலும் நம்பாதீர்கள்; ஏனென்றால் நடக்க வேண்டியது நடக்கும் ” என தெரிவித்தார்.
மேலும், “அவர் இழந்த வருடங்களை யார் தருவார்கள்? என சிம்மன்ஸ் விடுதலை குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.