இலங்கையில் மதுபான பயன்பாடு காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு 237 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியாக இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மதுபான மற்றும் போதைப் பொருள் தகவல் மத்திய நிலையத்தின் ஆலோசகர் புபுது சுமனசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மதுபான பயன்பாட்டினால் ஏற்பட்ட வீதி விபத்துக்கள், கைத்தொழிற்சாலைகளில் உற்பத்தி வீழ்ச்சி, வீட்டுத் தலைவர்கள் அகால மரணமடைதல், மருந்துப் பொருட்களுக்கு அதிகளவில் செலவிட நேரிடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டிலும் மதுபான விற்பனையின் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் பொருளாதார நலன்களை விடவும் மதுபான பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய சுகாதார கேடுகளுக்காக செலவிட நேரிட்டுள்ளது சுமனசேர தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டில் மதுபான விற்பனையின் மூலம், மதுவரித் திணைக்களம் 165.2 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளது.
எனினும், மதுபான பயன்பாட்டினால் ஏற்பட்ட சுகாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்காக இந்த வருமானத்தை விடவும் கூடுதல் தொகை செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வயது வந்த சனத்தொகையில் 40 வீதமான ஆண்கள் மதுபானம் அருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மதுபான பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொலிஸார் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை மேற்கொள்ள நேரிடுவதாகத் தெரிவித்துள்ளார்.